முத்தங்களால் ஆனதில்லை என் கவிதை.
முத்தங்களால்
ஆனதில்லை என் கவிதை.
அது எப்போதும்...முத்தங்களைத் தனக்குள்
அனுமதிப்பதில்லை.
முத்தங்கள்...
வாழ்வை விடுதலையிலிருந்து
சிறைக்குள் தள்ளிவிடுவதை
என் கவிதை உணர்ந்தே இருக்கிறது.
முத்தங்கள்
அன்பைச்சொல்லுவதாய்...சொல்லப்பட்டாலும்....
இறுதியில் அவை
புத்தனைத் தயாரிக்கும் போதிமரங்களாகிவிடுகின்றன...
என்பதை என் கவிதை
அதன் முன்னோர்களிடமிருந்து
தெரிந்தே வைத்திருக்கிறது.
என் கவிதை
கடவுளைக் கூடமுத்தமிடுவதில்லை....
மதம் மனிதனைப் போர்த்தி இருக்கும் போதை என்பதைஅதுஅறிந்துகொண்டதிலிருந்து.
ஆயுதங்களால்நிரம்பிவிட்டஉலகத்தில்...
முத்தங்களுக்கான இடம்
குறைந்தே வருகிறது...என்பதை
என் கவிதை உணர்ந்தே இருக்கிறது.
ஒரு குழந்தையின் முத்தம் பற்றிய
உங்களின் கேள்வி
என்கவிதையின்பார்வைக்குவருகையில்....
அன்பைத் தவிர
வேறு எதிர் நோக்கற்ற
மழலை இதழ்களின் சப்தம்...
முத்தத்திற்கான அர்த்தங்களால் நிரம்பியதல்ல..
அது...
நீங்கள் உங்களின் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டிருக்கும்
மொழியற்ற...பேரன்பின் ஆசி
.என்று சொல்லும் என் கவிதை....
தான் நிராகரித்த முத்தங்களுக்காக...
ஒருபோதும் வருத்தப்படப் போவதில்லை.