நீ வைத்த கொள்ளி..

ஞாபகமிருக்கிறது பெண்ணே..
வாழ்வா சாவா என்று
நான் உன் சம்மதத்திற்கு
காத்திருக்க..
வெறும் மௌனத்தை மட்டும்
பேசவிட்டு..
எனக்கு தெரியாமல்..
நீ புன்சிரித்த நிமிடங்கள்..
ஞாபகமிருக்கிறது!!!

ஞாபகமிருக்கிறது பெண்ணே....
நீ சம்மதம் சொன்ன நொடி
மனதிலே பல பூமிபந்து
வழுக்கி விழுந்ததாய்...
ஞாபகமிருக்கிறது!!!

ஞாபகமிருக்கிறது பெண்ணே....
உன் வீட்டின்
என் மாமனும்...
என் வீட்டின்
உன் அத்தையும்..
தொலைபேசி
மணியோசை கேட்டால்..
மாறி மாறி நம்மை
கழுகாய் கண்காணித்தும்..
தோழியுடன் நீ பேசுவதுபோல்..
தோழனுடன் நான் பேசுவதுபோல்..
நாடகம் நடித்தது..
ஞாபகமிருக்கிறது!!!

ஞாபகமிருக்கிறது பெண்ணே....
கற்பனையில்
காகிதங்களில்
நான் எழுதிய பொய்யை
நீ கவிதை என வாசித்து
உன் கண்கள் சிரித்தது..
ஞாபகமிருக்கிறது!!!

ஞாபகமிருக்கிறது பெண்ணே....
சைக்கிள் மணியடித்து
உன்னை உன் வீட்டுமாடி
வரவைத்து..
செயினை கழற்றி மாட்டி
சக்கரம் சுழலும் இடைவெளியில்
சீமாட்டி உனை கண்டது..
ஞாபகமிருக்கிறது!!!

ஞாபகமிருக்கிறது பெண்ணே....
நீ நலம் வாழ நானும்..
நான் நலம் வாழ நீயும்..
இருவரும் சேர்ந்து வாழ நாளும்..
கருப்பணசாமி காதில் ஓதியது
இன்று-
செவிடன் காதில் ஊதிய
சங்காய் போனது..
ஞாபகமிருக்கிறது!!!

ஞாபகமிருக்கிறது பெண்ணே....
அப்பன் அரிவாள் தூக்குவான்..
அம்மை தலைவிரித்தாடுவாள்..
என்று பருவத்திற்கே உண்டான
சாக்கு போக்கு சொல்லி..
பின்புத்தி வந்தபின்..
காதலுக்கு நீ வைத்த
சாதிக்கொள்ளி..
ஞாபகமிருக்கிறது!!!

ஞாபகமிருக்கிறது பெண்ணே....
எங்கோ ஒரு ஓரம்
நல்ல காலம்..
ராகு காலம்...
எம காலம்..
கலிகாலம்..
எதிர்காலம்..
நிகழ்காலம்..
இறந்தகாலம்..
எல்லாவற்றிலும்
உன் ஞாபகமிருக்கிறது!!!

எழுதியவர் : கார்த்திகேயன் (26-Jan-13, 7:53 pm)
சேர்த்தது : kharthikeyan
பார்வை : 182

மேலே