சாதனை செய்த தந்தையிடம் ஒரு வேதனை கேள்வி
பொத்தி பொத்தி
வளர்த்த உடம்பு - இன்று
போக பொருளாகி போன தென்னவோ?
சுத்தி சுத்தி
வந்த சொந்தம் - இன்று
சுரத்தில்லாமல் பேசி சென்ற தென்னவோ?
எட்டி எட்டி
நின்ற கூட்டம் -இன்று
ஏளனமாய் இகழ்ந்து சென்ற தென்னவோ?
தட்டி தட்டி
வளர்த்த பெண்மை -இன்று
வெம்மைக்கு விருந்தாவ தென்னவோ?
கட்டி கட்டி
அணைத்த தந்தை-இன்று
கழுத்தை திருகி கொன்ற தென்னவோ?
பொத்தி பொத்தி - வாயை பொத்தி
சுத்தி சுத்தி - உறவை சுத்தி
எட்டி எட்டி - இளமை எட்டி
தட்டி தட்டி - தலையை தட்டி
கட்டி கட்டி - கையை கட்டி
வளர்த்ததினால் தான்
வரம்புமீறும் வல்லினத்தை
வகுத்தறிய வசதியின்றி
சிற்றினத்திடம் சிதைப்பட்ட
உறவுக்கு உதிர்ந்து விட்ட
சின்னஞ்சிறு தெய்வத்தை
சிரசை திருகி கொன்ற
தந்தைக்கு ஒரு கேள்வி
நீயும் ஒரு தந்தையோ ?
எய்தவன் எங்கோயிருக்க
அடிபட்டவன் தவறென்று
வலியிலும் வதைத்து
வதங்கிய பூவை
தீயில் வாட்டியது
தீர்வாகுமா ????
கயவனை காட்டி கொடுக்க மறைத்து
மகளை மண்ணில் புதைத்தது முறையோ?
முத்துப்போல் வாழ வேண்டிய மகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்தது முறையோ?
தவறு செய்தவன் தரணியிலிருக்க
தன் மகளை தண்டித்தது முறையோ?
தீர விசாரித்து தீர்வு கண்டிருந்தால்
தீர்க்க தரிசனமாகும்
உன் வாழ்வும்.. -நீ
பெற்ற குழந்தையின் வாழ்வும்
மற்ற குழந்தைகளின் வாழ்வும்