$$$$ பெண்ணின் பெருமை $$$$

ஆட்டத்தை முடித்து ஆவெனக் கத்திக் கொண்டு
வீட்டுக்குள் ஓடி வந்த ஒல்லிச் சிறுமியவள்
வாட்டந்தனைப் போக்கிட தண்ணீரைக் குடிக்க
நாடித் தன் அன்னையின் முகத்தை நோக்கினாள்.

சேலைத் தலைப்பினில் மூக்கினை உறிஞ்சி
சேல்விழி வழியும் கண்ணீரைத் துடைத்து
வேலைக்கு நடுவில் வெந்திடும் சோற்றினை
வெற்றுப் பார்வையில் வெறித்து நின்றாளவள்.

செய்தித் தாளிலே தன் தலையை மறைத்து -தான்
பெய்த அர்ச்சனை மனத் திரையினிலே ஓடிட
செய்த தவறினை எண்ணித் திருந்தா உளம்
வெய்து கொண்ட அப்பா வெறுப்புடன் பார்த்தார்.

“அம்மா ஏனப்பா அழுகிறாள் பாவம்?” ”ஏன்
அம்மா நீ அதை என்னிடம் கேட்கிறாய்
வேளைக்கொரு மனநிலை காட்டுவதென்பது
சேலைக்கு மட்டுமே உரிய சொத்தாகும்.”

அப்பா சொன்னதில் பொருல் உணராமல்
தப்பாய் ஏதோ நடந்துள்ளது ஆயினும்
எப்போதுமே அவர் சொல்வதில் குழப்பம்
தப்பாய் பேசியே சாதிப்பார் அப்பா.

பிஞ்சு நெஞசத்தில் நஞ்சினை ஊட்டிய
வஞ்சகன் செயலினை பார்த்திட்ட பாட்டி
அஞ்சித் தன் மகனை அப்படியே விடாமல்
கொஞ்சிக் குழந்தையை அருகில் அழைத்தாள்.

“ஆண்டவன் முதலில் படைப்பு செய்கையில்
ஆண்களைப் படைத்துப் பார்த்து இருந்தான்
ஆண்மை இருந்தும் முழுமை பெறாதவன்
மேன்மை அடைந்திட பெண்ணைப் படைத்தான்.

ஆண் தானாக முழு மனிதனும் அல்ல
பெண் பெண்ணாகப் பெரும் புதுமையும் அல்ல
ஆணும் பெண்ணும் இணையும் போதில்தான்
ஆண்டவன் சாயலை பெற்றிடும் மானுடம்.

பெண் என்பவள் வெறும் போகப் பொருளோ
கண் நீர் சதா சொரியும் சோகப் பொருளோ
வேளைக்கு வேளை மன நிலை மாற்றி
ஏளனம் செய் வகை நடிகையும் அல்ல.

குழந்தை நீயும் பிறந்த இவ்வுலகினில்
கும்பிடத் தகும் கூப்பிடுதொலைக் கடவுள்
குடும்பம் என்பதே ஒரு கோயில் ஆகும் அதில்
குலவிளக்குத்தான் ஒளிரும் பெண்கள்.

கலக்கம் வந்தால் தன் தோளில் அணைத்து
உலக்கை இடிபோல் கவலையைத் தகர்க்கும்
மெல்லிய தோள்களே ஆதரவு அளிக்கும்
சொல்லு மொழிகளோ சோகம் போக்கிடும்.

இடையது ஒடிவது போலே இருந்தும்
இடைபடும் துன்பம் எதையும் தாங்கும்
மடையராய் மணாளர் இருந்த போதிலும்
கடைசிவரை கணவராய் கும்பிடும் பக்தை.

கடவுளின் படைப்பில் பெண் பலவீனமானவள்
நடைமுறை வாழ்வில் இரும்பு மனத்தவள்
உடைக்க நினைத்தாலும் உடையா உள்ளத்தை
உடைத்துப் போடும் ஆண்கள் அறிவீணர்.

பாட்டி சொல்லிய பெண்ணின் பெருமையைக்
காட்டும் கண்ணாடியாய் பாட்டி இருப்பதை
நோட்டம் விட்டவள் நொடியில் ஓடினாள்
தோட்டப் பூவொன்று உவந்து அளித்தாள்.

எழுதியவர் : தா.ஜோ. (1-Feb-13, 3:03 pm)
பார்வை : 213

மேலே