விளம்பரமாய் அழிக்கப்படும் பக்கங்கள்.

அடர்ந்த காடுகளையும்,
படர்ந்த மலைகளையும் தாண்டி
இன்றாவது இந்த இரவை
படித்து முடிக்க வேண்டும்
என்ற முனைப்புடன்தான்
அந்தியின் அட்டை விரித்து
பவ்வியமாக பக்கங்கள் புரட்டுகிறேன்
நேற்றிரவு சில..பக்கங்கள் படித்து
அடையாளமிட்டிருந்ததை யாரோ
அழித்திருந்தார்கள்
அரச மரத்தின் கீழ் பலர்
என்னுடைய இரவு புத்தகங்களின்
அழித்த பக்கங்களில்
அவர்களின் மொழியில்
சொற்களை எழுதி
வசித்துக் கொண்டிருந்தனர்
மன்னிக்கவும் எழுத்து பிழை,
வாசித்துக் கொண்டிருந்தனர்.
கையாலாகாத எனது பாசை
கபோதி ஒருவன்
பின் அட்டையில்
விளம்பரம் கொடுத்திருந்தான்
“இனி காவி பசுக்கள்
மேயும் புண்ணியங்களால்
மேன்மையடைந்து
புதர்கள் அழிய
புனிதமாகும் இந்த பூமி”யென!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.