வாழும் வள்ளலார்கள்

அணை நீர் வரும்..!
அடி மனம் குளிரும் என்று காத்திருந்தேன்
ஆற்று நீர் வரும்..!
ஆசை எல்லாம் தீரும் என்று காத்திருந்தேன்
கால்வாய் நீர் வரும்..!
கடுகளவாது வாழ்வு தளிரும் என்று காத்திருந்தேன்
மாரி வரும்..!, வரவில்லை
மாதம் மாறியாது வரும் என்று காத்திருந்தேன்
காத்திருந்து..! காத்திருந்து..!
கண்கள் பூத்துதான் போனது
கண்களாது பூக்கட்டுமே..!
உள்மனம் எகத்தாளம்தான் செய்கிறது
காத்திருத்தல் காதலில் சுகம்தான்..!
கவிஞர்கள் சொன்னது நிஜம்தான்..!
கணநேரம் விவசாயியாய் மாறிப்பார்
காத்திருத்தலின் வலி புரியும்
கவிஞன் எழுதிய வரியும்
பற்றிக் கொண்டு எரியும்..!
வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடினேன்
சொன்ன வள்ளலார் மகான் என்றால்
வாழும் விவசாயி ஒவ்வொருத்தரும் மகான் தான்..!
நாங்கள் தற்கொலைக்கு ஆதரவாளர்கள் இல்லை
ஆனால் பசிக்கு பேராதரவாளர்கள்
தற்கொலையை எதிர்க்கும் கொள்கைக்காரர்கள்
பசி எங்கள் கொள்கையை மாற்றிப்போட்டது
பட்டினி எங்கள் கோட்பாட்டை மீறிச்செய்யத் தூண்டியது
பிரிந்த என் உயிர் மண்ணில் மரம் ஆகட்டும்..!
இறந்த என் உடல் அதற்கு உரம் ஆகட்டும்..!
ஓ..! அதற்கும் நீர் வேண்டுமா..?
என் ஆன்மாவும் காத்திருக்கட்டும் ..!
இறந்தவன் வெறும் உழவன் இல்லை..!
இன்றைய உணவுத் தயாரிப்பாளன்..!
நாளைய உலகுத் தயாரிப்பாளன்..!
காப்போம் நம் உலகுத் தயாரிப்பாளனை...!

எழுதியவர் : சுனில் “பிரபாகரன் (7-Feb-13, 10:48 pm)
சேர்த்தது : sunilprabakar
பார்வை : 112

மேலே