எப்போதும் பெய்யும் மழை....
உனக்கும் எனக்கும்
இடையில் பெய்கிறது....
ஒரு முடிவற்ற மழை.
மாலை நேரத்தின் பறவைகள்
கூடடைகின்றன...
சிறகுகளிலிருந்து சிதறும் ஈரத்தோடு.
கனவின் சிறகுகளோடு
விரியும் இரவு....
நீல வெளிச்சத்தில் அலைகிறது
கட்டுப்படாத தனிமையில்
என்னைத் துடுப்பாய்ச் செலுத்தியபடி.
மெல்ல எழும்பும்
கனவின் புகைகளில் கட்டப்படும்
எனது மணல் வீடுகளில்...
எனது விரல் அடையாளங்களுக்குள்ளே
மறைந்து கிடக்கிறது உன் பாதச் சுவடுகள்.
ஒளிரும் கண்களில்...
உறையும் நீண்ட சமுத்திரத்தின்
விறைத்த பாறைகளில்...
உனது பெயரும்...எனது பெயரும்.
நம்மை முத்தமிடவரும்
மீன்களைத் தீண்டிச் சிரிக்கும்
கடலில் விழுந்த நிலவு.
வெப்பத்தின் அலைகள்
கரை தேடி என்னை நனைக்க...
இப்போதும் பெய்து கொண்டிருக்கிறது
ஒரு பெரும் மழை...
உனக்கும் எனக்கும் இடையில்.