இங்ஙணம் விவசாயி...

நீ உண்ணும் ஒரு பருக்கை உணவிலும் என் சில துளி விழி நீரும், பல துளி வியர்வை நீரும் உள்ளது!!


உழைப்பின் வழியில் பிழைப்பு நடத்தும் எனக்கு வாழ்வில் உயர்வு என்பதில்லை. ஆனால் என் நிலதிற்கு கல் ஊன்றி வேலியிடும் உனக்கு விற்பனையில் லாபம் பல கோடி..

விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது நிற்கும் வரை விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு விதி கொடுக்கும் ஒரே பதில் “ஒரு சான் கயிறு தான்”

பொழிவதும் பொய்ப்பதும் வருணன் தான் என்றால் சிறை பிடிக்க வேண்டும் அவன் சிரம் கண்டு.. வறட்சியில் என் வயிற்றை கழுவவும் வெள்ளத்தில் என் பயிரை காக்கவும்..

விவசாயம் அறியாத வீணர்கள்தான் விவசாய கட்சியும் விவசாயத்திற்காக கட்சியும் தோற்றுவிக்கின்றனர். ஆனால் அது விடிந்தப் பின் எரியும் விளக்கைப் போல் உள்ளது..

தொழில் அதிபர் தன் மகனை தொழில் அதிபராக்க நினைக்கிறான், மருத்துவன் தன் மகனை மருத்துவனாக வளர்க்கிறான்.ஆனால் என் விவசாய அன்னையோ என்னை விவசாயாக பார்ப்பதற்கு வெறுக்கிறாள்!! வேதனை படுகிறாள்!!

நான் விவசாயி ஆக போகிறேன் என்றால் கர ஓசை எழுப்புகின்றனர் காது குளிர. ஆனால் அவர்களை விரல் காட்டி நீங்கள் விவசாயம் செய்வீர்களா என்று கேட்டால் கரம் கட்டி நிற்கின்றனர், அது கேவலம் என்று எண்ணி!!

ஆனால் நான் இந்த கடினம் கண்டு கலங்கப் போவதிலை.. வேதனையுற்று விலகப் போவதில்லை, ஏனெனில்

உயிர்க்கு உத்திரவாதம் இல்லாமல்; உழைத்து வெறும் கையுடன் கரை சேர்ந்தாலும் சிரம் தாழாமல் சீரிட்டு செல்கிறான் என் தோழன், சமுத்திர தாயின் கரம் பற்றி மீன் பிடிக்க..
அவன் படும் துயரத்தை விட என் துன்பம் பெரியதல்ல!!

எழுதியவர் : முரளிதரன் செங்கோடன் (10-Feb-13, 11:26 pm)
பார்வை : 243

மேலே