எண்ணங்களை எழுதுகிறேன் - 3

ராமநாதனை உங்களுக்குத் தெரியுமா? புதுஷா ஒருத்தரை சந்திக்குறப்போ வணக்கம் சொல்லிட்டு பேச ஆரம்பிச்சுஅஞ்சு நிமிஷத்தில் இடத்தை காலி பண்ணிடுவார் இவர்ன்னு பதில் வணக்கத்தை சொல்லிட்டு குசலம் விசாரிக்க நினைச்சால் சத்தியமா உங்களுக்கு ராமுவைத்தெரியாது தான்.

பட்டையா நெத்தியில் கோடு போட்டிருக்கும் திருநீறு.. ஸ்படிகமாலை அணிஞ்சுட்டு வாயிலே திருவாசகம் மென்னுட்டே திரியும் ராமானுஜ சாஸ்த்ரிகள் மகனும் என் ஆறாங்கிளாஸ் நண்பனுமானவன் ராமு என்கிற ராமநாதன் .

லொயோலால டிகிரி முடிச்சதும் நான் எல்போரால ஜாயிண் பண்ணப்போ தூர்தர்ஸனில் வேலைகிடைச்சு கீர்த்தின்னு போன் பண்ணினான்,

சொல்ல மறந்துட்டேனே நான் கீர்த்திவாசன் டிகிரி ஹோல்டர்..மனுஷாலுக்கு நாவிலே சனின்னு சொல்வாலே எனக்கும் கிட்டத்தட்ட பிரம்மா தலை முழுதுக்கும் வைச்சுண்டார். நிறைய சிந்தனை நிறைய கிறுக்கல் புக்ஸ்க்கு அனுப்பி வைக்குறது.. போன வேகத்தில் செவத்தில் அடிச்ச பந்தாட்டம் ரிட்டன் வரும்., பிரசூரம் ஆகாமல் ரிட்டன் வந்த லெட்டரினாலே ஒரு கல்யாணத்துக்குச் சமைக்கலாம்.

குடும்பமும் வேலையும் முக்கியமா இல்லே உங்களுக்கு வ்ரைட்டர் கீர்த்திராகவன்னு நேம் முக்கியமான்னு என் வைய்ஃப் கேக்குற காலம் வரும் வரைக்கும் நிறைய கம்பேனி மாறிட்டு கடைசியா பெங்களூரில் ரெயின்போ சிஸ்டம்ஸில் உறைஞ்சுண்டேன்.

நாட்கள் குளிரிலே உறைஞ்சும் கரைஞ்சும் போய்கிட்டு இருக்கு இப்போல்லாம் எழுதுறதெல்லாம் சுத்தம். பெரிய ஜர்னலிஸ்ட் ஆகனும்ன்னுல்லாம் கனவு இல்லே! நடந்து போறச்சே அதோ போறாரே அவர்தான் தி ஃபேமஸ் வ்ரைட்டர் கீர்த்தின்னு நாலு பேர் காதுபடவோ அல்லது படாமலோ பேசுற லெவலுக்கு பேர் வாங்கனும். அதுக்காக என் எழுத்து அவ்வளவு பட்டகமால்லாம் இருக்காதுன்னு இல்லை.. பேஷா எழுதுறேழ்ன்னு என் ஆத்துக்காரியே கல்யாணம் ஆனபுதுசுலே புகழ்ந்திருக்கா... இன்னைக்கு நிலமை வேறே... என் பையன் ரேங்க் கார்டிலே கூட என் மனைவிதான்... சிக்னேச்சர். நான் ஆபீஸ் ஹஸ்பெண்ட் மட்டும். இந்த ஹவுஸ் வொய்ப்க்கு எதிர்பதமா வைச்சுக்கலாமா! ஆபீஸ் ஹஸ்பெண்டை...?

எழுதுறதுல்லாம் வசதி படைச்சவாளுக்குத்தான். புதுமை பித்தனை பாருங்கோ எவ்வளோ நன்னா எழுதினார் இருக்குறச்சே யாரும் சீந்த்லையே?
நமக்குச் சரிப்பட்டு வராது.

கலிக்கட்டிலே ஒரு கான்ஃப்ரன்ஸ்காக போயிருக்கும் போது ராமுவைச் சந்திக்க நேர்ந்தது..

தூர்தர்ஸன்லே எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்குறான்னு எப்பவாச்சும் டீவிப்பாக்குறப்போ கூட இருக்குறவாகிட்டே சொல்லிக்றதுண்டு... கிடைச்ச ஆஃபரில் வலுவா ஒட்டிண்டு செட்டில் ஆகிட்டான்னு நினைக்குறச்சே...லேசா என்மேலே கூட எனக்கு பச்சோதாபம் உண்டு...

கலிக்கட் போஷர் ஸியர் மீட் ஏரியாவிலே தொபுக்கடீர்ன்னு முன்னாடி வந்து நின்னான் கூட காமிராவோட ஒரு வடநாட்டு பையன். ஹே ராமு..என்கும் முன்னமே ஹே கீர்த்தீன்னு கட்டிண்டான்..

கேரளா சினி இண்டஸ்ட்ரீலே மோஸ்ட்வாண்டட் டைரக்டராம். என்னடாச் சொல்றே தூர்தர்ஸன் என்னாச்சுன்னு கேட்க தோணினது அடக்கிண்டேன்.

இதே என் தோப்பனாரா இருந்தா கேட்ருப்பார்.

காலேஜ் முடிச்சுட்டு நான் இண்டர்விய்யூக்காக கம்பேனிகளா ஏறி இறங்குறச்சே ஒருநாள் காலையிலே என் வீட்டுக்கு வந்திருந்தான்...

என்னிட்ட குசுகுசுன்னு பேசுறது ஊஞ்சல்மேல படுத்திருந்த அப்பாகாதுக்குள்ளாற விழுந்துருச்சி போலே ஏண்ட்டாப்பா என்ன சங்கதின்னார்.

சினிமால சேரபோறானாம்.

நம்மவாக்கு எல்லாம் ஏண்டா அதெல்லாம்ன்னு என் அம்மா சுகர்லஸ் காபியோட வந்து நின்னு சொன்னப்போ!

கேணயா ஈசிண்டு நின்னுட்டே சான்ஸ் கிடைச்சிருக்கு மாமி! எவ்ளோ நாள் தான் தூர்தர்ஷன்லே தூங்கிண்டு கிடக்றது.. சதாசிவம்ன்னு பெரிய ட்ரஸ்டி ஒருத்தரோட ஃப்ரெண்டு படம் எடுக்குறாளாம் என்னப் பார்த்து பிடிச்சு நடிக்க கூப்பிட்றுக்கா. நெக்ஸ்ட் சண்டே சென்னைக்கு போறேன் அங்க ஜானகி வீட்ல தங்கிண்டு சினிமால நடிக்கலாம்ன்னு இருக்கேன் மாமின்னு முடிச்சான்.

என்அப்பாவிடமிருந்து பதில் வரலே முணுமுணுப்பு மட்டும் வந்தது... நீங்க அதைக் கேட்டிருந்தாலே உங்களுக்கு புரிஞ்சிருக்கும் அவர் ராமுவை நன்னா போட்டு பிசைஞ்சு எடுத்திட்டிருந்துருப்பார்.

அவரும் ராமுவோட அப்பாவும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்... உபநிடதங்களை படிச்சவா.. டீவில வேலைன்னதுக்கே செண்ட்ரலாச்சேன்னு ஒத்துண்டா! இவன் சினிமான்னா ஒத்துப்பாளா!

கலிக்கட்லே உன்னை சந்திப்பேன்னு நினைக்கவே இல்லைடா! நீ தமிழ்சினிமாலே பெருஷா வருவேன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீ என்னடான்னா மல்லுவுட்லே ஆனாலும் ஆச்சர்யம் தான். என்றேன்.

சிரிச்சுட்டே என்னடா தொப்பையெல்லாம் போட்டுண்டுட்டேன்னு கேட்டுடைச்சான். எந்த இடத்திலும் நான் வாங்குற முதல் அடி இதுதான். அதுக்காக மறைச்சு ஒழிச்சு வைச்சா எடுத்துண்டு வர முடியும்... மூக்கை விட முன்னாடி வந்து நிக்குற என் கேடயம் ...

சரி ஈவ்னிங் டின்னர் என்னோடதான் படவான்னேன். ரூம் நம்பர் சொன்னேன் மறுபடியும் சிரிச்சுக்கிட்டான். வர்ரானோ தெரியலை...

மணி மூணு ஆச்சி! கான்ஃப்ரன்ஸ் ஹால்லே எங்க ஜி.எம் போட்டு காய்ச்சி எடுத்திண்டு இருந்தார். பசிக்றதேன்னு விட்றானா பார் மனுஷன்னு ஹேமா திட்னது ஹால்லே இருந்த மொத்ததிலே பாதிக்கும் குறைவானவாக்காச்சும் கேட்ருக்கும்.

பெங்களூரு பொண்ணுங்கள்லே ஹேமா டிஃப்ரெண்ட் எப்போதும். என்னைவிட நிறைய வயசு வித்யாசம் என்பதால் நான் அவளுக்கு கீர்த்திசார் அவ்வளவே! மற்ற எல்லா கலீக்ஸ் கூடவும் ஹாஸ்யம் பண்ணுவா!

நான் பழமெல்லாம் கிடையாது.. சமயத்தில் நானும் கே.பி மாதிரி ஜோக் பண்ணுவேன். மொத்தமா சிரிச்சுப்பார்.

கான்ஃப்ரன்ஸ் முடிஞ்சு வெளிலே வந்தாச்சு.. மெசபாட் ரூம்நம்பர் 1610 கீ தரப்பட்டது. போய் ஒரு தூக்கம் போட்டு ஒழிச்சாதான் நல்லா இருக்கும்ன்னு தோணினது.. சாப்பாடு மறந்து அசந்துட்டேன். மனுஷன் சாப்பாட்டை மறக்குறச்சே...தன் அயர்ச்சியை உணர்கிறான்.

மணி ஏழு! இந்த ராமு பய பாருங்களேன் வரவே இல்ல..
அப்பாட்ட சொல்லிட்டு போனவன் தான் சிலமாசங்களா அவனைப்பத்தி ஊர்ல மூச்சே காணும்..

ஒருநாள் போன்லே நான் நடிச்ச படம் நாளைக்கு ரிலீஸ் ஆகப்போகுதுன்னு அவன் வீட்லே போன் பண்ணி சொன்னானாம். பசங்கல்லாம் பேசிக்கிட்டாங்க.. நான் அடுத்த இண்டர்வியூவுக்கு கிளம்பிட்டு இருக்கும் போது அம்மா சொன்னா!

படம் ரொம்ப சுமார் ரகம்ன்னு சொன்னாலே தேவலாம். நடிப்பு பத்தில்லாம் விமர்சனம் பண்ண எனக்கு கலைஞானம் கம்மின்றதாலே விட்டுட்றேன். படத்திலே அவன் அழுகுற சீன்லே நிஜமாவே சிரிப்பு வந்தது எனக்கு அடக்கிண்டேன்.

அதுக்கப்றம் ஒரு ஆறேழு வருஷம் கழிச்சு மீட் பண்ண வாய்ப்புகிடைச்சது.. பெங்களூர் ட்ரெயினிலே போகும் போது மதுரை ஸ்டேஷன்லே என்னங்க உங்க கூடப்படிச்சவர்ன்னு சொல்வீங்களே உங்க ஃப்ரெண்டு ! அதாங்க சினிமாலல்லாம் நடிச்சிருந்தாரே அவர் மாதிரியே இருக்குன்னு ஒரு லைட் ஐவொரி சர்ட் மனுஷரை அடையாளம் காட்டினா என் வொய்ப்.

அட ஆமா! அது ராமுவே தான். ஜோல்னாவோடு நின்றுகொண்டிருந்தவனை கூப்பிட்டு பேச நினைக்கும் முன்பே அவனே அப்போதும் முதலில் கட்டிண்டான் என் ஆம்ப்டையாளுக்கு வணக்கம் சொன்னான்.பையனுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தான். தூர்தர்ஸன்லே பக்தி ப்ரோக்ராம்காக மதுரை வந்தானாம். இடையில் ஆல் இண்டியா டூர் போனானாம். நடிக்றது அவ்வளவா வசதியா இல்லைன்னான். போலி கௌரவம் தான் சினிமாக்கு செட் ஆகும் நமக்கு அது ஆவுறதில்லேடா கீர்த்தீன்னான். இப்படி நிறைய -னாம் களை பகிர்ந்துட்டு சிரிச்சுட்டே கிளம்பிப் போனான்.

காலேஜ்ல படிக்குறச்சே பஸ்பாஸ்க்கு போட்டோ எடுக்க காசில்லாம நின்னச்சே போட்டோ எடுக்காம
ரெண்டுபேருமா சேர்ந்து நின்னு போட்டோ எடுத்து பாஸ்போர்ட் சைஸ்க்கு கட் பண்ணிக்கிட்டோம்.

பெடல் சைக்கிள் எல்லாம் பெரியவாதான் ஓட்டனும்ன்னு எங்கள்ல விதிச்சு வைச்சிருந்தா.. அதை முதல்ல உடைச்சு என்னை சினிமாக்கு கூட்டிண்டு போனவன் ராமு,

மகேந்த்ரன் படம்ன்னா அவனுக்கு இஸ்டம்.படம் பார்த்துட்டு அது எந்த நாவலை தழுவிய கதைன்னு தேடிப்பிடிச்சு வாங்கி என்னிட்ட கொடுத்து படிக்கச் சொல்லிகேட்பான்.

அப்பவே அவனுக்குள்ளே ஒரு சினிமாக்காரன் இருந்தான். அவனுக்குள்ளே ஒரு காதலும் இருந்தது.. ஆமா! அவன் தங்கை ஜானகியோட ஃப்ரெண்டு.. ஸ்ரீரங்கத்துக்காரி.. லீவிலே வந்து இங்கேயும் அங்கேயும் திரிவா.. நல்ல வாகான உடற்கட்டு.. களையான முகம்.

கன்னுக்குட்டிக்கு போஜனம் கொடுக்க வைக்கோல் எடுக்க வரும்போது இவா ரெண்டு பேரும் நெருங்கி நின்னு பேசுறச்சே பார்த்திருக்கேன்.

காதல் எங்காத்து சாம்பார்லே பாகற்கா மாதிரி... ஓடிவந்துட்டேன். தனியா கேட்டச்சே.. நெளிஞ்சான்.
அப்புறம் அவ மாமி எங்கேயோ பறந்திட்டா! இவனும் இதயம் ஒருதலைக்காதலாட்டம் பெர்ஃபார்ம் பண்ணிட்டு திரிஞ்சான். ஆனா இப்போ வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கலை..

இடையிலே சினிமாபத்தி அவன் சொல்லி இருந்த வாசகம் கவனிச்சீங்களா!? போலி கௌரவம் தான் சினிமாவில் செட்டாகும்ன்னு என்னம்மோ சொல்லி இருந்தானே... இன்னைக்கு அதே சினிமாலே மோஸ்ட் வாண்டடாம்.. !

மனுஷால்லாம் அப்படித்தான் நமக்கு சில விஷயங்கள் கிடைக்காம போறச்சே கசந்தும் தித்திக்க தித்திக்க கிடைக்குறச்சே குறை பட்டுக்கிட்டதெல்லாம் மறந்தும் போறது இயல்பாகிடுத்து... நான் எழுதுறதை விடும் போது பொறுமிக்கிட்ட மாதிரி..

மே ஐ கம் இன்...!

அவனாத்தான் இருக்கும்ன்னு நினைக்குறேன் சரி நீங்க கிளம்புங்கோ! க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணுறோம்! நிறைய பேச வேண்டி இருக்கும்.. நாம அப்புறமா பார்ப்போம்..

கதவு தட்டப்பட்டது ! அதே வடநாட்டுப் பையன் ”சார் இந்த லெட்டர் கொடுக்கச்சொன்னார்”.

...............சாரி கீர்த்தி அவசரமா டெல்லிகிளம்புறேன்.காலையிலே உன்கிட்ட சொல்லி இருப்பேன். நீ கூப்பிட்டப்போ மறுக்க முடியலை.. இன்னைக்குப்பூறா உன் கதைகளைத்தான் நினைச்சுட்டே இருந்தேன் நீ நல்லா எழுதுவேல்ல.. உன்னோட ”தூண்விளக்கு” கதையைத் தான் இப்போ படிச்சுட்டு இருந்தேன்.
உனக்குள்ள இருக்கும் திறமை இருட்டுக்குள்ள வரைஞ்ச ஓவியம் போல போய்டுச்சே! நெக்ஸ்ட் மீட்ல உன்னை வேறமாதிரி பார்க்கனும்ன்னு ஆசைப்படுறேன், நீ மறுபடியும் பேனாவை எடுக்கனும் அதுக்காக என்னால ஆன எல்லா ஹெல்ப்பும் பன்றேன். ஐ டூ எவ்ரிதிங் ஃபார் யூ டெஃபனட்லி.மை டியர் ஃப்ரெண்ட்

பை
ராமு..

மனசுக்குள்ளே சிரிச்சுக்கிட்டேன், வேறென்னத்தைச் சொல்ல...


எண்ணமும் எழுத்தும்
-கவிதைக்காரன்.

எழுதியவர் : -கவிதைக்காரன்! (11-Feb-13, 12:07 am)
பார்வை : 192

மேலே