வசை - கே.எஸ்.கலை

மூடினால்
இருட்டென்று
முட்டாள் பூனை
நினைக்குமே....
இங்கே – கண்ணைத்
திறந்துக் கொண்டு
இருட்டைக் கூட
வெளிச்சமென்று
குருட்டுப் பூனை
கனைக்குதே....!!!

பாறைகளை;
கட்டிப் பிடித்தழுது
முத்தமிட்டுக் கொண்டிருந்தால்,
சிற்பியோ சிற்பமோ
இங்கில்லை...
என்றும் - தட்டுவதால்
நொறுங்கும் கற்கள்
சிற்பமாகப் போவதில்லை !!!

வித்தில்லா
காய் புதைத்து,
விருட்சம் வரும்
என்று நம்பி
விடிய விடிய நீரூற்றி,
வெட்டிக் கதைப் பேசி
“கெட்டிக்காரனாம்”
சொல்கிறார்கள் ! - அதற்கு
வேலி கட்டிக்
காத்துக் கொண்டு
காட்டும் (ஆ)வேஷமோ
“விஸ்வரூபம்” !!!

குப்பைக்
கொட்டிப் போவோரை
குன்றிலேற்றித் துதி பாடி
துள்ளிக் குதிக்கும்
கோமாளிகள்,
அள்ளித் தெளிக்கும்
பன்னீர்ரெல்லாம்
அழகிய பூக்களில்
வரவில்லை
அவை -அழுகியப் பூக்களின்
சாராகும் !
இப்படிப் போனால்
தேன் தமிழ்
அழிந்துப் போக ஆகாது
வெகுநேரம் !!!

மகுடம் சூடிய
நரியெல்லாம்
அரியாய் நினைத்து
அரியணையில்
சரியாய் தப்பு செய்தாலும்,
உரமாய் ஊளையிடும்
ஓநாய்கள்
ஒய்யாரமாய் உயர்த்திக்
கொடிபிடித்து
உழைத்துக் கொடுப்பது
யாருக்கு ?

ஆதிக்க சிந்தனை,
அடக்குமுறைக்
கொந்தளிப்பு - என்று
அகல வாய்திறந்து
அலறும்
அதிசய அறிவாளிகளே.....
அந்த வார்த்தைகளுக்கு
அர்த்தம் தேடி
அகராதி புரட்டுங்கள்
அன்றேல்
அகம் திறந்து சிந்தியுங்கள் !!!

பல்லடுக்கு
மாடி வைத்து
பள்ளிக் கூடம்
கட்டுவார்கள் !
பாடம் நடத்தும் ஆசானை
பல்லைக் கடித்து
திட்டுவார்கள் !

உன்னில்
பிழை கண்டால்
நான் உனக்கு ஆசான்
என்னில் பிழை கண்டால்
நீ எனக்கு ஆசான்
என்று போகும் பயணமிது !
இங்கு தப்பை தப்பாய்ப்
பார்த்தல் தப்பு - அந்த
தப்பைச் சரியாய்ப் பார்த்தல்
அதைவிடத் தப்பு !

அடித்துச்
சொல்லித் திருத்துங்கள்
இல்லையேல்,
இவையெல்லாம் -
கோவில் இடிக்கப் பாடிய
தேவாரம் !
நாளடைவில்
தமிழ் செத்துக் கிடக்கும்
தெருவோரம் !!!

எழுதியவர் : கே.எஸ்.கலை (16-Feb-13, 9:06 am)
பார்வை : 673

மேலே