நாமெல்லாம் யதார்த்தவாதிகள்...
இன்னமும் என் பேரூந்தைக் காணும்...
ஈ.எம்.ஐ கட்டவேண்டிய நாள் கடந்துவிட்டது பாரேன் மறந்தே போய்ட்டேன்...
பெரியவன் ஸ்கூலில் எக்ஸ்கர்ஷனாம் ரெண்டா....யிரம் கேட்குறாங்க பத்தையா...
புதினா சட்னி வைச்சுருந்தா இன்னும் எடுபட்டிருக்கும் தக்காளிசாதம்... ஏவ்வ்வ்வ்....
அப்புறம் சார்...டெல்லில குளிரெல்லாம் எப்படி வாயெல்லாம் பல்லாகும் போனில்....
***** ...லாகின் சோசியல் மீடியா... *****
அவர் மகன் போட்டோ பார்த்தீங்களா... சின்னப்பையன் ச்சே! ஹ்ம்ம் நம்மால என்ன பண்ணமுடியும் மேல இருக்குறவன் பார்த்துப்பான்....
ராஜீவை புலிகள் கொன்னது மட்டும்நியாயமா... உயிர்ன்னா எல்லாம் ஒன்னுதானே சார்...
இந்தியன் ஆர்மி இங்க ஒரு பையனை சுட்டாளே அப்போல்லாம் எங்கே போனீங்க...
டெல்லி மேட்டர்க்கு அடுத்து குஷ்பு இப்போ இந்த போட்டோ... சோஷியல் நெட்வொர்க் எத்திக்ஸ்...
என்ன பனிரெண்டு வயசுப்பையனை கொன்றார்களா? அப்படியா?..ச்சே! மனசாட்சி இல்லாத மிருகங்கள்.. அப்புறம் சேதி தெரியுமா சென்னையில் குறைந்த விலைக்கேண்டின் திறந்துட்டாங்களாமே....!
போகும் இடத்திலெல்லாம் அடிவாங்குகின்றான் தமிழன்... ஆனால் நிச்சயம் ஒரு நாள் ஈழம் மலரும்...Just Now 24 Likes.
_____________________________________________
இவையெல்லாம் வெறும் சதைதான்...
இப்போதாவது புரிந்ததா?... உணர்சிகளை எதிர்பார்கிறாயே... போடா போ...
மானுட பிண்டங்களைப் போய் மனசாட்சி விலை கேட்டால் அது என்ன செய்யும் பாவம் ...
மலங்க மலங்க விழிப்பதைத் தவிர்த்து...
வியாக்கினங்கள், வெட்டி தர்பார் எல்லாம் கூடி
மைய அரசையும் முந்தைய அரசையும் உமிழ்ந்து தள்ளும்...ஆளுங்கட்சி "புனிதநிலையம்" ஆகும் உஷ்ஷ்ஷ்ஸ்...
கோபமும் கொந்தளிப்பும்
குளத்திலிட்ட கல்லும் அலையும் போலத்தானிங்கே..
மீன் பிடிக்க கரைவேட்டிகள் வந்துவந்து போவார்கள்...
"என்ன மனிதர்கள் இவர்கள்"
- என்று யாரங்கே அணத்துவது...
யார் நீ...
உனக்கிங்கென்ன வேலை?
போடா போ...!
நாளைக்கு வருவாய்க்கு வழிசொல்ல நீயா வரப்போகிறாய்....
தலைக்கு மேலே..
வேலையிருக்கின்றது எங்களுக்கெல்லாம்
நிமிர்ந்து பார்க்கவும் நிமிடங்கிடையாது...
என் வீடு சலனமற்றுக் கிடக்கும்வரைக்கும்
நான் ஏன குய்யோ முய்யோவெனப் போகிறேன்...
அங்கே! அது பக்கத்துநாடு...
இங்கே! அது அடுத்த ஸ்டேட்டு..
சரி......!
அடுத்த தெருவிலாவது.....
அடப்போய்யா விவரம் தெரியாத ஆள் போல நீ
"அது வேற வார்டு"...
பொதுஜனமென்றால் இன்னுமா புரியவில்லை...
எதையும் பொறுத்துக் கடக்கும் குணமென்று?
காரணம் நாமெல்லாம் யதார்த்தவாதிகளாகிவிட்டோம்...
-`கவிதைக்காரன்`.