கருவறைக்குள் கருகிப்போன மொட்டு...
நடைவண்டி வாங்கி வச்சு...
உன்னை நடக்க வைக்க நான் நினைச்சேன்..!
நடைபிணமாய் என்னை அலையவிட்டு
எங்கே போன என் சின்னு...?
பஞ்சு மெத்தையை உன் பிஞ்சு உடல்
தாங்கிடத்தான் வாங்கி வைச்சேன்...
பாதகத்தி என்னை மட்டும் தனியா கிடத்திவிட்டு...
எங்கே போன என் சின்னு...?
தொட்டிலிலே நீ படுக்க...
தாலாட்டு நான் படிக்க ஆசைப்பட்டேன்...
வெறும் தொட்டில் இப்போ வேதனையில் ஆடுதடா...
எங்கே போன என் சின்னு...?
பசிச்சு நீயழுக மார்சுரந்து நான் கொடுத்து...
உன் பால் சிரிப்ப பார்க்கத்தான் ஆசைவைச்சேன்...
மார்வலிக்க என்னை அழவைச்சு...
எங்கே போன என் சின்னு...?
உன்னால என் உயிரு போகுமுன்னு சொன்னாங்க...!
அதக்கேட்டு போனாயா இல்ல...
உன் சுமைய தாங்கமாட்டா
இந்த அம்மான்னு நினைச்சாயா...
கண்விழித்து பார்க்கையில உயிரற்ற உன்னுடல் பார்த்து நெஞ்சடைச்சு போனாளடா இந்த அம்மா...
உன் அழுகைச்சங்கீதம் கேட்க வேண்டிய நேரத்துல..
ஒப்பாரி ஓலங்கள் கேட்டு
உயிர்துடிப்பு நின்றதடா ஒரு நொடி...
கண்ணீரு போதுமடா என் கண்ணே...
கண்துடைக்க வாடா என் சின்னு...
சுமந்த வயிறு துடிக்குதடா...
மீண்டும் உன்னை சுமக்க...
காத்திராம கருவறைக்குள் மீண்டும் வாடா என் சின்னு...!