கவிதா...!
மாம்பலம் ரயில்வே ஸ்டேசனிலிருந்து இறங்கி காய்கறி வாங்கலாம் என்று மார்க்கெட்டுக்குள் நுழைந்த போது சரவணா ஸ்டோர் பை நிறைய காய்கறியை வாங்கிக் கொண்டு எனக்கு முன்னால் நகர்ந்து கொண்டிருந்த தடித்த பெண்மணியை எங்கேயோ பார்த்த ஞாபம் என்றாலும் முத்தல் கத்திரிக்காயை வாங்கிக் கொண்டு போனால்... வீட்டம்மா வெள்ளாவில வச்சுடுவாங்களேன்ற பயத்தோட கத்திரிக்காயை அமுக்கி, அமுக்கி பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டிருந்தேன்...
இன்னா சார் இப்டி அமுக்கிகினு இருந்தா அப்பாலிக்கா வேற யாரு சார் வாங்குவா ஹக் ஹும் " என்ற காய்கறிக்காரனின் முனகலை நான் பொருட்ப்படுத்தவில்லை.. இப்போது தக்காளிக்கு இடம் பெயர்ந்து இருந்தேன். எங்கயாச்சும் புத்திய வச்சுக்கிட்டு பூச்சி தக்காளியா வாங்கிட்டு வந்துடாதீங்க...பாத்து முழுப் பழமா இல்லாம மொத்தமா காயா இல்லாம அரவெட்டா எடுத்துட்டு வாங்க என்று சகதர்மினி மண்டைக்குள் உட்கார்ந்து கொண்டு ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தாள்...
40 வயசு இந்த தாசில்தார் ஆபிஸ் கிளார்க் உத்தியோகம் எல்லாம் சேர்ந்து சராசரி ஒரு தமிழ்நாட்டு கவர்மெண்ட் எம்ளாயிக்கு என்ன என்ன தகுதிகள் இருக்கணுமோ அத்தனையும் எனக்கு குறைவில்லாமல் கொடுத்துருச்சு...போதாக்குறைக்கு ரெண்டு பொட்டப்புள்ளைங்களுக்கு பொறுப்பான ஒரு அப்பா வேசம் வேறு....
கல்யாணம் ஆன புதுசுல எல்லா பொம்பளைங்களும் புருசனுக்கு அடிபணிஞ்சு இருக்கறதும், அந்த கொஞ்ச நாளையே.. பெண்களை அடிமைப்படுத்துறாங்க ஆம்பளைங்கன்னு டீவிக்கு டீவி ரேடியோவுக்கு ரேடியோ பத்திரிகைக்கு பத்திரிக்கை பரபரப்பா எல்லோரும் பொலம்புறதும் ச்ச்சும்மா டமாசு சார்... பெண்ணடிமை எல்லாம் ஒரு காலத்துல இருந்து இருக்கலாம்...! என்னிய மாதிரி கல்யாணம் பண்ணி ஒரு பத்து, பதிமூணு வருசம் ஆகி எட்டு வயசுல ஒரு பொம்பளப்புள்ளையும், 6 வயசுல ஒரு பொம்பளப் புள்ளையும் வச்சுக்கிட்டு இருக்குற பெரும்பாலான நடுத்தர ஆம்பளைங்கள கேட்டு பாருங்க...
யாரு யார அடிமை பண்றான்னு நல்லா தெரியும்..! ஒண்ணும் இல்ல சண்டை போட்டு பொண்டாட்டிய எதித்துப் பேசி மூஞ்சக்காட்டி திமிரா இருந்து ஒண்ணும் ஆகப் போறது இல்ல. ஊரச் சுத்திட்டு கடைசில வூட்டுக்குதான் போகணும். அங்க பொண்டாட்டி சாடைப் பேச்சு பேசிக்கிட்டு மூஞ்ச இழுத்து நாலு முழம் வச்சுக்கிட்டு பேசாம இருந்தா பேஜாரா இருக்காது...? பத்தாக்குறைக்கு புள்ளைங்க வேற.. அதுங்க திரு திருன்னு முழிச்சுக்கினு ஒரு மாதிரி இருக்குங்க...
சர்தாம் போ.. இன்னாமா இப்போ...சரி பாத்துக்கலாம் வுடுன்னு சொல்லிட்டு சமாதானமா போவுறதுதான் மரியாதை.ஒரு பத்து பர்சண்ட் ஆளுங்க பொண்டாட்டிய எதுத்துப் பேசி அடிச்சு, புடிச்சு நாங்க ஆம்பளடான்னு பேசலாம்....தெருவுல வீராப்பு பேசி இன்னா சார் ஆகப் போவுது...வூட்டுக்குப் போயி அவன் நிம்மதியா இருக்கானா அதான் மேட்டரு..?
எங்க வூட்டு அம்மாவே காய்கறி எல்லாம் வாங்கிடும் எப்பவும்....(ஹி ஹி ஹி எப்பவாச்சும்...) அப்ப அப்ப (எப்பவுமே....) நான் ரங்கநாதன் தெருவ க்ராஸ் பண்ணி டெய்லி வர்றேன்லயா அதான் என்னிய வாங்கிட்டு வரச் சொல்லும்...
எம்புட்டு வேகமா ஓடுது காலம்? கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்புடி இருப்பேன் திமிரா, அங்குட்டும் இங்குட்டும் ஆடி ஓடிக்கிட்டு....ம்ம்ம்...
"என்னா சார் பில் போடவா சாயங்காலத்துலயே கனவா ?" கடைக்காரன் என்னை இழுத்து வெளியே போட்டான்...., ஆமாம்ப்பா பில்போடு... என்று அவனிடம் சொல்லி விட்டு எதித்தாப்ல இருந்த சின்னகண்ணாடிய பாத்தேன்....
ரெண்டு பக்கமும் நிறைய முடி நரைச்சுப் போச்சு....மீசையில கூட ரெண்டு மூணு வெள்ளை முடி வந்துருச்சு....கையால முடிய கலைச்சு விட்டு....என்னையே நான் பாத்துக்கிட்டேன்....! ஜானி படத்துல முடிவெட்ற கேரக்டர்ல வர்ற ரஜினி மாதிரியான ஒரு தோற்றம்.. எனக்கு இருக்க மாதிரி தோணிச்சு...ஹ்ம்ம்ம்ம்
என்னோட மீசை அந்த மாதிரி லுக் கொடுத்து இருக்கலாம்...! காய்கறிகாரனிடம் சில்லறையை வாங்கிக்கிட்டு...காய்கறிப் பையை எடுத்துக்கிட்டு திரும்ப நினைச்சேன்...ஏய்...நீங்க...விஜய்தான? அப்டீன்னு குரல கேட்டு திரும்பி பார்த்தா.....
அந்த சரவணா ஸ்டோர் பைய தூக்கிட்டு போன தடிச்ச பொண்ணு (பொம்பளை..) ....நான் டக்குன்னு முகம் எல்லாம் விரிய ஏய்...ஏய்...நீ...நீங்க கவிதா தானேன்னு கேட்டு சத்தமே போட்டுட்டேன்...! ஆமாம் விஜய் கவிதாவேதான்..காலேஜ் முடிச்சு...எல்லோரும் பிரிஞ்சு போனப்ப லாஸ்ட்டா பாத்தது.... வாவ் ரொம்ப சந்தோசம் டா...........நாக்கை கடித்துக் கொண்டாள் அந்த 'டா' வுக்காக.
நீ எப்டி இங்க கவிதா?ன்னு நான் கேட்ட உடனே அவ கல்யாணம் கச்சேரி மாப்பிள்ளை வேலை மூணு பிள்ளைங்க எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டு வா விஜய்....காஃபி சாப்டுகிட்டே பேசுவோம்....நீ கறிகாய் எல்லாம் வாங்கிட்டீல்ல....
கேள்வியை கேட்டு விட்டு அவ என்ன பாத்த பார்வை என்ன அப்டியே அலேக்கா காலேஜ் டேய்ஸ்க்கு தூக்கிட்டு போய்டுச்சு....! விழுந்து விழுந்து காதலிச்சேன்....அப்ப எல்லாம் எப்டி இருப்பா தெரியுமா கவிதா? ச்ச்சும்மா சினிமா ஸ்டார் மாதிரி....
காலம் எல்லாத்தையும் மாத்திப் போட்டுடுது....செம குண்டாகி கண்ணுல எல்லாம் செழுமையே இல்லாமா ரொம்ப டயர்டா தெரியுறா ஆனா சந்தோசமாத்தான் இருக்கா போல..! கடைசி வரை நாம காதலிச்சோம்னு சொல்ல முடியாம போனதுக்கு நம்ம குடும்ப சூழ்நிலையும் கல்யாணம் ஆகாம இருந்த அக்காவும் காரணமா போய்ட்டாங்க...
எப்டி இருந்தாலும் அவளுக்காக உருகி உருகி திரிஞ்ச காலம் எல்லாம் எப்டி மறக்கறது..? அவ பேச்சும் சுறு சுறுப்பும் விஜி விஜின்னு என்ன சுத்தி வந்ததும் ...., ரெண்டு பேரும் போட்டி போட்டு கவிதை எழுதுனதும்,... ஹ்ம்ம்ம் கடைசிவரைக்கும் சொல்ல முடியலையே என் காதல...!!!!
" என்ன விஜி........காலேஜ் டேய்ஸ்க்கு போய்ட்டியா....வா ...வா காபி குடிச்சுக்கிட்டு பேசலாம் " இழுத்துப் போட்டாள்.
ம்ம்ம்ம் எப்டி கவிதா இருக்க? முதல் வாய் காஃபியை உறிஞ்சி விட்டு பழைய ஞாபகத்தில் அவள் முகத்தைப் பார்த்தேன்.
இருக்கன்டா....! இந்த முறை டா சரளமாக வந்தது.
அவள் முன் முடியை கேசுவலாக விலக்கி விட்டு ....என்ன இருந்தாலும் காலேஜ் டேய்ஸ் தான்டா நாம சந்தோசமா இருந்த நாளு எல்லாம்..
அதுக்கப்புறம் மேல் படிப்பு, அதை பாதியில நிறுத்திட்டு கல்யாணத்துக்கு மாப்ள பாக்குறாங்க பேர்வழின்னு வீட்ல பாத்த மாப்ளைக்கு எல்லாம் டீ காபி கொடுத்து இப்போ ரவிய கை பிடிச்சு இருக்கேன். புடிச்ச மாதிரி வாழ்க்கை யாருக்குமே அமையுறது இல்ல விஜி.. கிடைக்கிற வாழ்க்கைக்குள்ள புடிச்ச விசயங்கள பொதைச்சுக்கிட்டுதான் எல்லோரும் வாழ்றாங்க...இந்த நடிப்ப எல்லோரும் இயல்பா செய்றாங்க.....நான் செய்றேன்...நீயும் செய்றன்னு நினைக்கிறேன்....தட்ஸ் ஆல்...!
இருபது வருசம் கழிச்சு இப்டி ஒரு சூழ்நிலையில உன்னை சந்திப்பேன்னு எதிர்பார்க்கல கவிதா...வாழ்க்கை என்னைய கூட எங்கயோ கூட்டிட்டு வந்துருச்சு....குடும்பம் பிள்ளைங்க பொண்டாட்டி என் சொந்தக்காரங்க, அவளோட சொந்தக்காரங்கன்னு எல்லாமே ஒரு வேகத்துல ஒருத்தர ஒருத்தர் திருப்தி படுத்த வாழ்ந்துட்டு இருக்கோம் ஆனா...எல்லாமே நடிப்பு....
ஆமா என்னாச்சு...உன் கவிதை, படைப்புகள், புத்தகமெல்லாம்...? கவிதா சலனமில்லாமல் கேட்டாள்...
" குடும்பச் சுமை முதலில்
ஏறி இறங்கியது
என் கவிதைகள் மீதும்
கனவுகள் மீதும்தான் ......"
சொல்லி விட்டு அவளைப் பார்த்தேன் கண் கலங்கி இருந்தாள். இரண்டு பேருமே கஷ்டபடலை விஜி.. நான் சந்தோசமா நல்லாதான் இருக்கேன்...நீயும் அப்டித்தான் இருக்க....
ஆனா விருப்பப்பட்ட திசையில நாம பயணிக்கல...வெவ்வேற திசையில...போய்க்கிட்டு இருக்கோம். அது நாம சகிச்சு நகர்ந்துகிட்டு இருக்க திசை.
காஃபிக்கு காசு கொடுத்து விட்டு வெளியில் வந்தோம்...! பரஸ்பரம் நலம் விசாரித்து இருவரின் அலை பேசி எண்களையும் பறிமாறிக் கொண்டோம்..! இப்போ எல்லாம் நீ எதுவும் எழுதுறது இல்லையா கவிதா..?
" விரகதாபத்தை
காமத்தில் தோய்த்தெடுத்து
என்னை விழுங்கும் இரவுகளில்
கலவிக்குப் பின்னான
கணவனின் அயற்சியான
உறக்கத்திற்கு நடுவே
பிள்ளைகளின் தலை கோதிக் கொண்டு
ஏதேனும் ஓரிரு வரிகள் யோசிப்பதுண்டு
அப்படி யோசிக்கையில்
தப்பாமல் உனை நினைப்பதும் உண்டு...! "
அவள் சொல்லி முடித்திருக்கையில் அவளின் சேலை முந்தானை காற்றில் படபடத்ததைப் போல என் மனசும் பட படக்க...என் அலை பேசி கதறத் தொடங்கி இருந்தது....
"என்னாங்க...வரும் போது அப்டியே தெரு முனையில் மொளகா, மல்லி அரைக்க கொடுத்து இருக்கேன்...வாங்கிட்டு வந்துடுங்க..பிள்ளைங்க ஸ்கூல் விட்டு வந்துருச்சுங்க....நான் சமைக்கப் போறேன்..சரியா..." ஹ்ம்ம்ம் சரிம்மா...வாங்கிட்டு வந்துடுறேன்..! பேசி விட்டு அலை பேசியை துண்டித்தேன்....
கவிதா....ஆழமாய் என்னைப் பார்த்தாள்..! உனக்கு வயசாயிடுச்சு இல்ல விஜி.... ஹா ஹா அப்போ எல்லாம் எவ்ளோ ட்ரிம்மா இருப்ப..? இப்போ தொப்பை எல்லாம் விழுந்து.....போயி.....ஹ்ம்ம்ம்ம் அதை நான் சொல்லி இருக்க கூடாது.....
சரி உன் வைஃப் பிள்ளைங்க எல்லம் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வா....ரவிக்கிட்டயும் சொல்றேன் உன்ன பத்தி சரியா..நைஸ் டு மீட் யூடா....
என்று பரஸ்பரம் பாய் சொல்லி விட்டு இருவரும் கொஞ்சம் நகர்ந்திருந்தோம்...!
விஜி.....விஜி..... மீண்டும் அழைத்துக் கொண்டு என்னருகில் வந்தாள்....
ஏன் விஜி.....காலேஜ்ல படிக்கும் போது நீ என்கிட்ட ஐ....லவ் யூன்னு சொல்வன்னு எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா..? பாவி கடைசி வரை சொல்லாம என்ன விட்டுட்ட...நானும் இப்போ யாரோ மாதிரி ரங்கநாதன் தெரு முனையில உன்னைப் பார்த்துட்டு.....பாய் சொல்லிட்டு போறேன் பாரு...ச்சே... என்னடா லைஃப் இது........ ஹா..ஹா..ஹா......
சப்தமாய் சிரித்து விட்டு ......போயே விட்டாள்...!
நான் இரண்டு காய்கறிப் பைகளையும் சுமந்து கொண்டு...அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல்... அரைத்து வைத்த மிளகாய் மல்லியை மறக்காமல் வாங்க...நாடார் மில்லுக்கு சென்று கொண்டிருந்தேன்...!