நீரில் என் நிஜங்கள்
இப்போதெல்லாம்
தண்ணீர் - எனக்கு
புதுப் புது
அர்த்தங்களை புகட்டுகிறது
ஒவ்வொரு துளியின்
ஆரம்பத்திலும் ....
அள்ளி வீசும் வானம்
வள்ளலாய் - அவை
சிலவேளை
வானவில்லாய்
அன்பென மாறும்
சில வேளை
வாழ்வெனும் வில்லில்
அம்பென மாறும்
இன்னும் இந்த நீர்
வானம் பொழியும் தண்ணீராய்
மட்டும் நின்று விடாமல்
பலர் வாழ்வை கண்ணீராய்
அல்லவா நிரப்புகிறது
ஆரம்ப மின்னல் கொஞ்சம் வாழ்வில்
ஒளியை அள்ளித் தெறித்தாலும்
பின் வீழ்ந்த துளிகள் விதையானது
மண்ணில் - ஆனால் இவை
அத்திவாரமிட்டிருப்பது இன்பத்திற்க்காகவா ?
துன்பத்திற்க்காகவா ?எனும் புதிருக்கு
விடை புரியாது குழம்பிப் போனது
மனம் எனும் குப்பைகளால் நிரப்பப் பெற்ற
குட்டைகள்
இதமான இளம் தென்றல்
எதற்காகவென ஆராயாமலேயே
அதனை சுகமாக சுவாசித்தது
ஜீவன்.....
பின்னால் அதுவே சூறாவளி
என்பது தெரியாமலேயே - தெரிந்திருந்தால்
முன்பே
மூச்சை அடக்கியிருக்குமோ ? இல்லை
மூச்சு அடங்கி இருக்குமோ
என்னவோ
சில விநாடிகளுக்கெல்லாம் - இடியென
உருமாறியது என் இன்பங்கள்
அடையாளம் தெரியாமலேயே !
புரியாத புதிராகவே இருந்தது
வேகமாக வீசிய புயலும் அதுவரை ......
சோவெனப் பொழிந்தது - தண்ணீர்
மழையாய் வானில் - கண்ணீர்
துளியாய் வாழ்வில்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட பின்
எஞ்சி இருக்கும் பிணங்களின் ஓலமாகவே
என் வாழ்க்கை என்பதை மனம் எற்றுக் கொண்டது
இந்த மழையாலே
இப்போதெல்லாம் மழை
எனக்கு
புதுப்புது அர்த்தங்களை புகட்டுகிறது
ஒவ்வொரு துளியின் ஆரம்பத்திலும் .