!!!===(((புதைந்ததடா பொற்காலம்)))===!!!

மஞ்சள் வெயில்காயும்
மனம் திருடி முகிலோடும்
இலைகளில் உறவாடி
மாலைத் தென்றல் நடைபோடும்...
நகர்ந்தோடும் ஓடையிலே
நாவல்மரம் முகம் பார்க்கும்
நாணல்களின் இருண்டாரத்தில்
நல்லப்பாம்பு இரை பிடிக்கும்...
ஆடுமாடு கூட்டமெல்லாம்
அணிவகுத்து நடைபோடும்
குளம்படியில் நிலவொளியும்
குடியிருக்க மடிதேடும்...
சாமந்தி தோட்டத்திலே
வண்டுகூட்டம் திரிந்திருக்கும்
சாமத்து ஊர்க்குருவி
சத்தம் போட்டு பாட்டிசைக்கும்...
மாட்டுவண்டி பயணத்திலே
மனமதுவோ மேல் பறக்கும்
மாங்கிளையில் கூடுகட்டும்
மைனாக்கள் கவியுரைக்கும்...
வாய்காலில் நீரோடும்
பருவவயல் அசைந்தாடும்
வால்பிரண்டை கூத்தாடும்
வளைநண்டு புதிர்போடும்...
கெண்டைமீனும் கெளுத்திமீனும்
கம்மாயில் குதித்தாடும்
காணியெல்லாம் பச்சையாடை
கட்டிக்கொண்டு சிரித்தாடும்...
ஏரிக்கரை செடிகொடிகள்
இளவெயிலில் பொன்னாகும் - அந்த
காட்சியினை கண்டாலே
கற்பனையும் ஊற்றாகும்...
வெள்ளைகொக்கும் செந்நாரையும்
கோரைநீரில் நின்றிருக்கும்
வலையின்றி மீன்பிடிக்க
அலகுகளை தீட்டி வைக்கும்....
நெல்லிமரம் பூப்பூக்கும்
நீலக்குயில் சுரம் மீட்டும்
அந்தி குளத்தினிலே
ஆம்பல்பூ அசைந்திருக்கும்...
கள்ளி புதரடியில்
காட்டுமுயல் குடியிருக்கும்
கள்ளி முடையானோ
கடும்பசியைத் தீர்த்துவிடும்...
சோளக் கதிராடும்
கோலமயில் சிலிர்த்தாடும்
ஆலம் கிளிகூட்டம்
ஆராரோ தினம்பாடும்...
புங்க நிழல் சுகமோ
புத்தனாக மாற்றிவிடும்
மடைதிறந்த நீர்பாய்ந்து
''தங்கம்'' வயல்விளையும்...
இலந்தையில் கிழியாமல்
இளம்தென்றல் நுழைந்துவரும்
இன்னிசை அளபெடைகள்
இதைகண்டால் உருவாகும்...
மணிப்புறாவும் அணில்பிள்ளையும்
வாசல்வந்து விளையாடும்
காயவைக்கும் தானியத்தை
அதுவும்தின்று பசியாறும்...
காரப்பழம் சூரைப்பழம்
முட்செடியில் பழுத்திருக்கும்
எத்தனைபேர் சுவைத்திருப்பர்
நானடைந்த பாக்கியமே...
பிணைகட்டி வரகடிப்போம்
அரியெடுத்து நெல்லடிப்போம்
பசியென்று வந்தோருக்கு
பாசத்தோடு சோறிடுவோம்...
எல்லாமே ஓர்காலம்
பிறந்ததடா எமகாலம்
பொல்லாத விஞ்ஞானத்தால்
புதைந்ததடா பொற்காலம்...!!!
-------------------- நிலாசூரியன்.