குப்பைகளை என்ன செய்யலாம்? நம்மைச் சுற்றி பகுதி-4

நண்பர்களே! நம்மைச் சுற்றி பகுதி -3 ல் கண்ட இடங்களில் குப்பை போடுவது பற்றியும் ,அதனால் ஏற்படும் இடர்பாடுகளையும் கண்டோம்! அதே குப்பைகளைப் பயனுள்ள வகையில் எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போது காண்போம்!

வீட்டில் உண்டாகும் குப்பைகளை முதலில் தரம் பிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.இப்படிச் செய்தாலே நீங்கள் தெருவில் எறியும் குப்பைகளில் 80 சதவீதம் குறைவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பைகள் அல்லது கூடைகள் வைத்துக்கொள்ளுங்கள்.ஒன்றில் பால் கவர்,பாலிதீன் பைகள் போன்ற பிளாஸ்டிக் குப்பைகளையும்,மற்றொன்றில் பேட்டரி செல்கள் ,உடைந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றையும்,மற்றொன்றில் ஆணிகள் தகரங்கள் போன்ற உலோகக் குப்பைகளையும்
பிரித்து வையுங்கள். இவற்றுக்கென வரும் வியாபாரிகளிடம் இவற்றை விற்று விடலாம்.

இப்போது காய்கறிக் குப்பைகளில் இருந்து மீண்டும் காய்கறிகளைத் தயாரிக்கும் மாயாஜாலம் கற்போமா?

கோவையில் எங்கள் 'நண்பன் நல சங்கத்தை' சேர்ந்த தோழி சித்ரபானு சொல்வதைக் கேளுங்கள்.
முதலில் காய்கறிக் குப்பைகள்,வெங்காயத் தோல்கள்,முட்டை ஓடுகள்,அழுகிய வாழைப் பழங்கள்,ஆரஞ்சுத் தோல்கள்,தர்பூசணி,பப்பாளிக் கழிவுகள் போன்றவற்றை எடுத்து அவற்றுடன் கொஞ்சம் ஈஸ்ட் ,மற்றும் வெப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து கொண்டு கையுறை அணிந்து கொண்டு நன்கு கிளறிக் கொள்ளுங்கள்.
பின் காற்றுப் புகும் ஓட்டைகளுடன் கூடிய ,மூன்றடுக்கு மண் கலத்தில் மேல் கலத்தில் ஒரு செய்தித்தாளைப் போட்டு அதன் மேல் கொட்டிவிடவும்.பிறகு மூடி வைத்துவிட்டு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பின் திறந்து நன்கு கிளறி விட்டு இரண்டாவது கலத்துக்கு மாற்றிவிடவும். ஒரு இருபது நாட்களுக்குப் பின் அவற்றை மீண்டும் கிளறிவிட்டு மூன்றாவது கலத்துக்கு மாற்றி விட்டு முதல் மற்றும் இரண்டாம் களங்களில் புதிய குப்பைகளுடன் மீண்டும் தொடரவும்.
ஆரம்பித்து நாற்பது நாட்களுக்குப் பின் மூன்றாம் கலத்தைத் திறந்து பார்த்தால்,கருப்பு நிறத்தில் மண்வாசனையுடன் கூடிய அருமையான உரம் கிடைக்கிறது.இது கொஞ்சம் கூட ரசாயனக் கலப்பில்லாத இயற்கை உரமாகும்.
இதனை எடுத்தப் பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள்.
இதே போல் கலங்களை மாற்றி மாற்றி நிறைய இயற்கை உரங்களைத் தயாரிக்கலாம்.

இவற்றை நம் வீட்டு மொட்டை மாடிகளில் நிறைய தொட்டிகள் வைத்து அவற்றில் தக்காளி,கத்தரி,வெண்டை,வெங்காயம்,கீரை வகைகள் காலிபிளவர் ,முட்டைக் கோசு,கேரட் அவரை பட்டாணி ,பற்றிப் படரும் கொடிகளான
பாகை,புடலை ,பரங்கி,பீர்க்கு போன்ற வற்றையும்
வைத்து வீட்டை அழகு படுத்தலாம்.
இந்த செடி கொடிகளுக்கு நாம் தயாரித்த இயற்கை உரங்களை வாரம் ஒரேஒரு கைப்பிடியளவு போட்டு நீரூற்றி வந்தால் இரண்டே மாதங்களில் சத்து மிகுந்த ,ரசாயனக் கலப்பில்லாத சுவை மிகுந்த காய்கறிகள் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே கிடைக்கும் என்றால் வேண்டாம் என்றா சொல்வீர்கள்?
இந்த வகையில் என் தோழி வீட்டில் அனைத்துக் காய்கறிகளும் ,கீரைகளும்,மாமரம்,வாழை,பப்பாளி சப்போட்டா போன்றவையும் கயத்துக் குலுங்குகின்றன.நாமும் அவரைப் போல் செய்தாலென்ன? நாங்கள் ஆரம்பித்து விட்டோம்! அப்ப நீங்க..?
போங்க சார்? இருக்கிற வேலையில இதுவேறு என்று அலுத்துக் கொள்வது தெரிகிறது.
ஒரு முறை கண்மூடி அனைத்து மொட்டை மாடிகளும் பசுமையாக இருப்பதைக் கற்பனை செய்யுங்கள் எவ்வளவு இனிமையாக இருக்கிறது?
இப்போது சொல்லுங்கள்! செய்வீர்கள்தானே!
நான் மேலே சொன்ன எங்கள் தோழி ஒன்றும் வேலையில்லாதவர் அல்ல.இரண்டு காகித ஆலைகளுக்கு சொந்தக் காரக் கணவருக்கும்,இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாக உள்ள இல்லத்தரசி.பரத நாட்டியப் பள்ளி நடத்துபவர்.அவரே செய்யும்போது நம்மால் முடியாதா என்ன?
இதற்கெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப் பட்ட மூன்றடுக்கு மண் கலங்கள் கோவையில் உள்ள எங்கள் "நண்பன் நல சங்கத்தின்" அலுவலகத்தில் கிடைக்கிறது.வேண்டுபவர்கள் என் கைபேசி எண்,9865148464-ல் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு: இது ஒரு வியாபார நோக்கமல்ல! இயற்கையைக் காப்பாற்றும் இனிய வாய்ப்பு என்பதால் "நண்பன்"இதில் ஈடுபட்டுள்ளது.

( படைப்பின் இடையில் தொலைபேசி இலக்கம் அளிப்பது தளத்தின் விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நீக்கசொன்னால் நீக்கி விடுகிறேன்.
ஒரு நல்ல நோக்கத்துக்காகத் தான் என் தொலைபேசி இலக்கம் அளித்திருக்கிறேன் என்பதைத் தள நிர்வாகிகளுக்குத் தெரியப் படுத்துகிறேன் )

எழுதியவர் : கோவை ஆனந்த் (6-Mar-13, 6:31 am)
பார்வை : 1059

மேலே