ஒரு பொன்மாலைப் பொழுது (2)
..."இது ஒரு பொன்மாலைப்பொழுது"... (2)
ஆண்: 'நான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன சிந்தனை'
பெண்: 'வாங்க, தூரத்தில் மலைகளுக்கு பின்னால் மெல்ல ஒளியும் பகலை ரசித்துக் கொண்டிருந்தேன்.'
ஆண்: 'அப்படியா, நல்ல ரசனைதான்'.
பெண்: 'அது மட்டுமா, அஸ்தமிக்கும் சூரியன் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டே, பகலை உள் வாங்கும் அழகு அற்புதம்....
ஆண்: 'இயற்கையை இந்த அளவிற்கு ரசிக்கும் நீ, உன்னருகில் இருக்கும் இளைஞனை ரசித்தால் என்னவாம்..?'
பெண்: 'ரசிக்கலாம் தான். ஆனால் தடுக்கின்றது. "மெய் மறந்து பேசுபவர் இருப்பின், எங்ஙனம் மெய்ப்பொருள் ரசித்திட ஏகிடும்..?"
ஆண்: 'இது என்ன திருக்குறளா?'
பெண்: 'இல்லை எமது குறள்'.
ஆண்: ' விளக்கம் சொல்லடி தேவி.'
பெண்: 'உண்மையை மறைத்து பேசும் ஒருவரின் உருவத்தை எப்படி ரசிக்க முடியும்?'
ஆண்: 'உண்மையை உரைக்கும் முன் ஓடி விட்டாயடி...'
பெண்: 'ம்ம்ம்... இப்போது சொல்லுங்கள்'.
ஆண்: 'நேற்று உன்னைக் காண வரும் வேளையில், வஞ்சி ஒருத்தி தஞ்சம் நாடி, என்னைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்'.
பெண்: 'என்ன.....?'
ஆண்: 'என்னில் பாதி எனக்காக காத்துக் கொண்டிருப்பாள் என்று கூறி நழுவ பார்த்தேன். அதற்கு அவள்...'
பெண்: 'அதற்கு அவள்....? என்ன சொன்னாள் அவள்?'
ஆண்: ' அப்பாவையைக் காணும் முன், எனக்கு உதவிடு.. இல்லையேல் எப்பாவையும் உம்மை நெருங்காதபடி செய்திடுவாள் இப்பாவை...' என்றாள்.
பெண்: 'என்ன தைரியம்... யாரவள்?'
ஆண்: 'நான் குடியிருந்த கோயிலில் எனக்கு பின் வாடகைக்கு வந்து, என்னை ஓயாமல் வதைப்பவள், ஆனால் அன்பானவள்'
பெண்: 'ஓஹோ... தங்கையா...? நான் ஒரு கணம் கதி கலங்கி விட்டேன்..'
ஆண்: ' நேற்று நீ என்னைக் கலங்கிட வைத்தாயே, அதை விடவா?'
பெண்: "பழிக்குப் பழியா?'.. போதும் நாழியாகி விட்டது. நான் கிளம்புகின்றேன்...'
ஆண்: ' இன்றுமா பாதகி...'
பெண்: 'ஹாஹா... நாளை என்று ஒன்று இருப்பது உண்மையெனில்.....'
ஆண்: ' நாளை நீ வருவாயா..?'
பெண்: 'வருவேன்,,, வராமலும் இருப்பேன்...' இப்போது விடை கொடுங்கள்..'
ஆண்: ' விடை கொடுக்காவிட்டால்...'
பெண்: 'கேள்விகுறியாகி விடும் நாளைய நம் சந்திப்பு..'
ஆண்: ' வேண்டாம் கண்மணி.. நம் சந்திப்பு தொடரணும். சென்று வா... காத்திருப்பதும் சுகம் தானே..'