எனது கருத்து சரியா? தப்பா?- கே.எஸ்.கலை

தோழர்களே சர்ச்சைக்குள்ளான “ஒரு வேசியின்
உணர்வுச்சுவடுகள்” என்ற ருத்ராவின் படைப்பில் நான் பதிவு செய்த ஒரு கருத்தினை இங்கே தருகிறேன் வாசித்துப் பாருங்கள்....

எனது கருத்தில் உள்ள நியாய அநியாயங்களை சுட்டிக்காட்டினால் பேருதவியாக இருக்கும் என்று எண்ணி உங்கள் முன் அக்கருத்தினை அப்படியே பதிகிறேன் இங்கே!
````````````````````````````````````````````````````````````````````````````
என் முரணான கருத்துப் பரிமாறல்களை “சண்டைப் பிடித்தல்” என்று தொடர்ந்து சொல்லி வரும் ரௌத்திரனுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று இன்னும் நான் கற்கவில்லை!

இங்கு நான் சொல்ல வந்த விடயத்தை திரிபு படுத்தி “சண்டையாக” (உங்கள் பாணியில்) மாற்றி கொக்கரித்துக் கொண்டிருக்கும் குப்பைக் கிளரிகளை நியாயப் படுத்தும் ரௌத்திரன் தளத்தில் நடக்கும் எல்லா கூத்துகளையும் சரிவர கவனிக்க நேரம் இருக்காது போலும்...இருந்தால் அப்படியான ஒரு நியாயப் படுத்தல் ரௌத்திரனிடம் வாராது என்று நம்புகிறேன்.

முதலில் ஏன் அந்தச் சொல்லுக்கு மாற்று சொல் வைக்கலாமே என்ற என் எண்ணத்தை வெளிபடுத்தினேன் என்ற அடிப்படை ஆராயாமல் பேசுவதும், குட்டையைக் கிளறி மீன் பிடிக்க விழைகிறேன் என்ற தொனியிலான அசிங்கப் பார்வையும், கலை- ருத்ராவுடன் முரண்படுவதே நோக்காக கொண்டு கருத்துப் பதிகிறான், குற்றம் கண்டு பிடிப்பதே நோக்காக கொண்டு அலைகிறான் என்ற பக்குவமற்ற புரிதல்களும் எவ்வளவு சரியானது என்பதை அப்படி சொல்லிக் கொண்டு இருப்பவர்களின் சுயவிமர்சனத்திற்கே விட்டுச் செல்கிறேன் இங்கே!

வேசி என்ற சொல் பொது மேடையில் பயன்படுத்த இங்கிதம் இல்லாத சொல் என்று கூறுகிறேன் இல்லை என்று வாதாடுகிறீர்கள்....

உதாரணத்திற்கு ஒன்று கேட்கிறேன்...ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கினாலோ ஊடகச் செய்திகளில் அவர்களைப் பற்றிய தகவல் வழங்க வேசி என்ற சொல்லைப் பயன்படுத்த முடியுமா? ஏதாவது ஊடகங்களில் பயன்படுத்துகிறார்களா ? இல்லை என்பது நான் சார்ந்த சமூகத்தில் நான் காணும் ஒரு விடயம் ! ஏன் அப்படி சொல்வதில் என்று சிந்தித்துப் பாருங்கள்...(இது செய்தி அல்ல கவிதை என்றும் அறிவேன்)

மேலும் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்ற காரணத்தினால் அங்கு சம்பந்தப்பட்ட எல்லோரையும் குற்றவாளிகளைப் போல குறிப்பிடக் கூடாது...

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை சமூகப் பொதுவாழ்வில் இருந்து ஓரங்கட்டி விளிம்புக்கே தள்ளிவிடும் வன்மமான ஆற்றல் இச்சொல்லுக்கு உண்டு. அதனால் தான், பொதுவாகப் பெண்களை அடக்குவதற்கும் அவமதிப்பதற்கும் "வேசி", "தேவடியாள்" எனும் சொற்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறேன்.

தேவடியாள் அல்லது தேவரடியாள் என்ற சொல்லுக்கு ரௌத்திரனின் விளக்கம் சரியானதே....ஆனால் அந்த சொல் இப்போதோ “தேவுடியா” என்று மிகவும் கொச்சையாக, தூஷனைச் சொல்லாக மாறிவிட்டது என்ற நியாயத்தினை நாம் உணர வேண்டும் !

இன்று உலகில் நடக்கும் அடக்குமுறைகளில் இந்த பாலியல் இச்சைக்காக நடக்கும் அராஜகங்கள் எவ்வளவு தூரம் வேரூன்றி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கும் என்றால் அது அபத்தமே.

பாலியல் தொழில் செய்வோர் எல்லோரையும் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டி கொச்சைப் படுத்தி மலத்தைப் போல் ஒதுக்கித் தள்ளும் முன் ஒரு கணம் சிந்தியுங்கள்.....

எத்தனை பெண்கள் கட்டாய பாலியல் தொழிலுக்கு வீழ்த்தப் பட்டு இருக்கிறார்கள் என்று, எத்தனைப் பெண்கள் துப்பாக்கி முனையிலும், துஷ்டர்களின் துஷ்டச் செயல்களாலும் இன்று பாலியல் தொழில் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று....

எல்லாவற்றையும் விட கொடுமை ஒரு பெண் கற்பழிக்கப் பட்டு சீரழிக்கப் பட்டால் கூட இன்று வெளிப்படையாக அந்த பெண்ணை வேசி என்று சொல்லி விடுகிறார்கள்...( இவர்களுக்கு நான் சொல்லிய மாற்று சொற்கள் பொருந்துமா என்று கேள்வி எழுப்பாதீர்கள்.சொல்ல வந்த விடயத்தை கவனியுங்கள்)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பால்வினைத் தொழில் (விபச்சாரம்) வெளிப்படையாகத் தலையெடுத்தது

சிலப்பதிகார காலத்தில் மதுரையில் பெண்களின் ஒரு பகுதியினர் அரசர்களுக்கும், வாணிகர்களுக்கும் காமப்பசியைத் தீர்த்து வைக்கும் விலைமகளிராக மாற்றப்பட்டிருந்தனர். இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தை, அரங்கக்கூத்தியர்,நாடகக்கணிக்கையர், சேரிப்பரத்தை என பாலியல் பெண்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.இவர்கள் வாழ்கின்ற எண்ணென் கலையோர் வீதிகள் (எண்ணங்களைக் கலைக்கும் வீதிகள்) மதுரையின் இருபெரும் பகுதிகளாக இருந்தன. கடந்த சிலநூற்றாண்டுகள் வரை கூட அவர்கள் “தாசிகள்” என்று அழைக்கப்பட்டனர்...

அப்படியெனில் “மாதவியை” வேசி என்று விளிக்க முடியுமா ? அவளும் ஒரு நாடகக்கணிகை தானே ?

உக்கிரத்தை வெளிப்படுத்த நாம் பிரயோகிக்கும் இலக்கியச் சொற்கள், சமூகச் சொற்கள் எல்லா நேரமும் எல்லோருக்கும் பொருத்தமானதாக இருக்காது...அதை உணருங்கள் !
மாற்றீடாக நான் கூறிய சொற்களில் நயம் உள்ளது என்பதல்ல என் கருத்து அவையும் “வேசி” என்ற சொல் குறிக்கும் அதே விடயத்தினைக் கூறினாலும் அவற்றில் இருக்கும் உக்கிரம் அல்லது வக்கிரம் வேசி என்ற சொல்லை விட குறைந்தது என்பதே!

இன்று எத்தனையோ பெண்கள் எங்கள் நாட்டில் யுத்தத்தின் காரணமாக விபச்சாரிகளாக, கணிகைகளாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள்...அவர்களையும் நீங்கள் வேசி என்ற வட்டத்துள் உள்வாங்குவீர்களா? அவர்களின் துன்பியல் சரித்திரம் அறிவீர்களா?

இலக்கியத்தில் உக்கிரம் என்பதை இதயங்களைக் கிழிக்க பயன்படுத்தாதீர்கள் !

தமிழ் இலகணத்தில் இடக்கரடக்கல், குழுவுக்குறி, மங்கலம் போன்ற இலகணங்கள் நாம் புறக்கணிக்க கூடாது....

மேலே நான் சொல்லிய மாற்றீடுகளும் இந்த இலக்கணத்துள் முழுமையாக சேர்க்க முடியாது...இருபினும் அந்த இலக்கணத்தை கொஞ்சமாவது உரசிப் போகட்டுமே ! (நானும் பல இடங்களில் இதனை மீறி இருக்கிறேன்...அவை கற்றுத் தந்த பாடங்களை வைத்து தான் சொல்கிறேன் இவற்றை)
----------------------------------------------------------------------------
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை சமூகப் பொதுவாழ்வில் இருந்து ஓரங்கட்டி விளிம்புக்கே தள்ளிவிடும் வன்மமான ஆற்றல் இச்சொல்லுக்கு உண்டு. அதனால் தான், பொதுவாகப் பெண்களை அடக்குவதற்கும் அவமதிப்பதற்கும் "வேசி", "தேவடியாள்" எனும் சொற்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறேன்.
----------------------------------------------------------------------------
இதற்கு மேல் இந்த விடயம் குறித்து இந்த படைப்பில் எதனையும் நான் பதியப் போவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்..இது ரௌதிரனுக்கான பதில் மட்டும் அல்ல இந்த படைப்பு குறித்தான எனது முழுமையான நிலைப்பாடு..இது சரியென்று நீங்கள் ஏற்றாலும் தவறென்று எடுத்தாலும் அடியேனுக்கு அதிலொன்றும் நட்டமில்லை !

எழுதியவர் : கே.எஸ்.கலை (11-Mar-13, 8:59 am)
பார்வை : 355

மேலே