அன்பின் கொடூர முகம்..

சுக்கில பட்சத்து நிலவும்
அமானுஷ்யத் தனிமையும்
இந்தக் கரும்பசிய மரங்களும்
தேவலோக பிம்பத்தைப் பிரசவித்திருந்தன
நானோர் தேவன்
தேவர் தலைவன்
என் ஆட்சியின் கீழ் வாழும் எதனையும்
அடக்கியாள விரும்பாத என் கருணை பெரிது
என்னால் பூரணாயுசு அருளப்பட்ட
வானத்து மீன்களைப் போலவே
இந்த மின்மினிப் பூச்சிகளும்
சுதந்திர சந்தோஷத்துடன் மினுமினுக்கின்றன
கோட்டான்கள் ராத்திரி எஜமானர்கள்
சுவர்க்கோழிகளின் யாழிசைப்பில்
காதில் மது புகட்டும் இடைவிடாத ரீங்காரம்
நிலமூன்றிய என் சிங்காதனத்தின் பொற்சிற்பங்கள்
பொள்ளல் வகை சார்ந்தனவல்ல. கனவகை.
களவாடுதல் கடிதென்றாலும் பால பிராயத்தில்
அண்ணன் எடுத்துக் கொள்வானெனத் துணுக்குற்று
உணவருந்தும் தருணத்திலும்
மரப்பாச்சியை மடியில் இறுத்திக் கொள்ளும்
செயலையொத்துச்
சிங்காஸனத்திலேயே கண்ணயர்கிறேன்
இவ்விடம் பிடிக்க வேறு யாரேனும் அரக்கர் வரக்கூடும்
என் ஆளுகையின் கீழுள்ள ஜீவன்கள்
துன்பப்பட நேரிடும். அதனாலேயே
எல்லாத் துன்பங்களையும்
நானே தாங்கிக் கொள்கிறேன்
யார் மீது அதிகப் பாசமும் பிரியமும்
நேசமும் இருக்கின்றதோ
அவர்களாலேயே பெரும்பாலும் நேரிடுகின்றன
எல்லா விதமான துன்பங்களும்!

எழுதியவர் : பெ. சக்திவேல் (12-Mar-13, 6:19 am)
சேர்த்தது : chozhagan
பார்வை : 133

மேலே