பிள்ளை மனம் கல்லு.. .

குழந்தையாய் அழுதபோதெல்லாம்
உன்னோடு இருந்தாள்,
நீ வளர ஆரம்பித்தாய்.

உன் பிஞ்சுப் பாதங்கள்
உடலைத் தூக்கி
நடக்க முயன்ற போது
தடையற்ற மகிழ்ச்சியில்,
தாண்டவம் ஆடினாள்,
உனக்குள் தன்னம்பிக்கை
உதித்து உயர்ந்தது.

பள்ளிப் பிரவேசத்தில்
கல்விப் பயணத்தை
இனிப்புடன் தொடக்கி வைத்தாள்.
நீ முழுவதுமாய் மகிழ்ந்தாய்.

புதுத்துணி என்பதெல்லாம்,
உனக்கு மட்டும் தான்.
நண்பர்களிடம் மட்டுமே
அதைக் காட்டி மகிழ்வாய்.

உடல் நலம் குன்றிய போது,
மருத்துவராய் மாறி
மகத்துவம் புரிந்தாள்.
உபாதைகள் உன்னை விட்டு
ஓடத் தொடங்கின.

உன்னால் வரும் உரசல்களுக்கு
முடிவு கட்டுவதற்காக,
நட்பைக் கூடத் துரும்பாக்கினாள்.
பெரும் விலை கொடுத்து நீ
பாதுகாக்கப் பட்டாய்.

தனது சேமிப்பிலிருந்து அவள்
மிதிவண்டி வாங்கிய போது,
பெரிய விமானத்தை இயக்கிய
பெருமிதம் அவளுக்கு.

உனக்குப் பிடித்ததை
உனது முதல் வேலை நாளன்று
சமைத்துக் கொடுத்த போது
சமுதாயத்தில் உயர்ந்ததாய்
நீ உணர்ந்தாய்.

முதல் சம்பள தினத்தன்று
வாசலில் விழி வைத்துக்
காத்து நின்ற போது,
நண்பர்களுடன் நீ
நல்லதோர் விருந்திலிருந்தாய்.

உனது காதல் திருமணத்திற்கு
ஆசி வழங்கிய போது
நீ காதலியுடன் மட்டும் தான்
மகிழ்ந்திருந்தாய்.

பித்தாகிப் போன மனதின்
மொத்த ஆசைகளில்
மண்ணைத் தூக்கிப் போட
மனது நினைத்தது ஏனோ?
சுமைகளை எல்லாம்
இறக்கி வைத்த பின்னும்
மனம் அவளுக்கு,
கனமாகிப் போனதும் ஏனோ?

எழுதியவர் : சித. அருணாசலம். (18-Mar-13, 6:01 pm)
பார்வை : 96

மேலே