சுயவிமர்சனம்

உள்ளக் கேணியின் ஊற்றினை
உரத்து சொல்லிட முடியாமல்
உயிர்மெய் எழுத்தால் உருவாக்கி
உயர்ந்த மொழியாம் தமிழினில்
உலகுக்கு படைக்க விரும்புகிறேன் !
ஏற்றமிகு எண்ணத்தை எழுத்தாக்கி
ஏங்கிடும் நெஞ்சங்கள் மகிழ்ந்திடவே
ஏழிசை அறிந்திடா எளியோன் நான்
ஏந்திடும் மனதில் கவிதைகளை
ஏற்ற இறக்கமுடன் எழுதுகின்றேன் !
இலக்கியத் தமிழில் சிறந்தவனல்ல
இலக்கண எழுத்தில் தேர்ந்தவனல்ல
இன்னிசை பாடும் கவிஞனும் அல்ல
இயற்றமிழ் புலமையும் எனக்கல்ல
இனிய தமிழை என்றும் மதிப்பவன் !
வியந்திடும் உங்களை அறிகின்றேன்
விளம்பரமும் அல்ல இது புரிந்திடுக
விவரித்தேன் எனை நீங்கள் அறிய
விரிவாக எழுதவும் தெரியவில்லை
விரைந்து முடித்தேன் உங்களுக்காக !
இருப்பினும் தொடர்வேன் கவிதைகளை
இறுமாப்பு இல்லை இதை சொல்வதால்
இதயத்தின் ஊற்றை கொட்டிடவே
இன்பத் தமிழின் பற்றும் பாசமுமே
இவ்வுலகில் தமிழும் தழைத்திடவே !
பழனி குமார்