கவிஞர்கள் அறிய வேண்டிய வெண்பா பற்றிய சிறு குறிப்பு ..வாரீர்..! (அகன் )

தோழர்களே...
நான் இத்தளத்தில் வருகைப் புரிந்து இத்துணை நாட்களில் மரபு பா மணிகள் தோழர்.காளியப்பன் மற்றும் தோழர்.லண்டன் கிரிகாசன் அமைத்திடும் மரபு வகைகளில் மனம் பறிகொடுத்தேன்...தோழர் ரெளத்திரன் தவித்து இளைய தோழர்கள் எவராவது மரபு பா புனைய மாட்டார்களா என ஏங்கிய பொழுதுகள் ஏராளம்...அதனை தோழர் அகமது அலி இன்று குறைத்து உள்ள பொழுது என் நெஞ்சு இனிக்கும் பொழுது...
கவிஞர்கள் அறிய என பல குறிப்புகள் இங்கு அளித்துள்ளேன்...அவ்வரிசையில் இப்போது வெண்பா பற்றிய சில குறிப்புகள் அளிக்கிறேன்...இது ஒரு தொடக்கம்...

‘பா’ -வகைகள்
வெண்பா ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் ‘பா’ நால்வகைப்படும்.

வெண்பாவின் பொது இலக்கணம்
1. ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்.(சீர் எனில் ஒரு சொல் )
2. இயற்சீர், (மாச்சீர், விளச்சீர்) வெண்சீர், (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா.
3. இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும், பிறதளைகள் வாரா.
4. ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகள் ஒன்றுகொண்டு முடியும்.
5. செப்பலோசை பெற்று வரும்.(இது சற்று முக்கியம் )
6. இரண்டடி முதல், பன்னிரண்டு அடிவரை வரும்.

வெண்பாவின் வகைகள்
வெண்பாவின் வகைகள் ஆறு. அவை,
குறள் வெண்பா,
நேரிசை வெண்பா,
இன்னிசை வெண்பா,
பஃறொடை வெண்பா,
நேரிசைச் சிந்தியல் வெண்பா,
இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்பன.

1. குறள் வெண்பா:
வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளைக் கொண்டதாய், ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவது குறள்வெண்பா (குறள் – இரண்டடி).
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இக்குறட்பா ஒரு விகற்பத்தான் வந்த குறள் வெண்பா. (க என்னும் எழுத்து எதுகையாக இரண்டு அடிகளில் ஒன்றி வந்துள்ளது)


2. நேரிசை வெண்பா :
வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, நான்கு அடிகளைக் கொண்டதாயும், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றும், முதல் இரண்டடி ஒரு விகற்பமாயும், கடைசி இரண்டடி ஒரு விகற்பமாயும், நான்கடிகளும் ஒரு விகற்பமாயும் வருவது நேரிசை வெண்பா எனப்படும்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை.
இப்பாடலின் நான்கடியிலும், இரண்டாமடியின் இறுதிச் சீரிலும் ஒரே எதுகை பெற்று ஒரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா.

உன்னுள் கலைவைத்தாய் ஊக்க மலைவைத்தாய்
கன்னல் மொழியுன்னுள் கள்வைத்தாய்- மின்வைத்தாய்
மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
தண்ணீர்த் தமிழேநீ தாய்.
இஃது, ஒரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா

3. இன்னிசை வெண்பா : வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வரும். இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, இரண்டு விகற்பத்தானும் வருவதும் இன்னிசை வெண்பா எனப்படும்.
தாய்தமக்கே ஒப்பில்லை தாரணியில் எப்பொருளும்
சேய்நம்ம்ச் சீராட்டி செந்நீரைப் பாலாக்கி
வாய்வழியாய்த் தாமூட்டி வாழ்விக்குந் தெய்வமொன்று
தாய்போலும் உண்டாமோ தான்.
இப்பாடலில் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் இல்லை. நான்கடிகளும் ஒரு விகற்பத்தான் வந்துள்ளன. (இரண்டாம் எழுத்து ய் எதுகையாகி ஒன்றி வந்துள்ளது)

தானங் கொடுக்குந் தகைமையும் மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமும் – தெற்றெனப்
பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை யார்க்குங் கயிறு.
இப்பாடலில் இரண்டாம் அடியில் தனிச்சொல் வந்துள்ளது. ஆனால், நான்கடியிலும் மூன்று விகற்பங்கள் வந்துள்ளதால், இஃது இன்னிசை வெண்பாவாயிற்று.

தொடரும்.....

எழுதியவர் : agan (19-Mar-13, 8:09 pm)
பார்வை : 1189

மேலே