சொற்கள்.

சொற்களிடம் காட்டிடுவேன்
என் அதிகப்படியான மரியாதையை
எப்போதும் நான்.
முரண்பாடான வடிவங்களிடையே
பரஸ்பர ஒற்றுமையை வளர்க்க
நிரந்தரமாகப் போராடும் குணம்
அவைகளுக்கு எப்போதும் உண்டு.
கூட்டங்களாகப் பவனி வரும்போது
கூற வேண்டிய கருத்துக்கள்
முற்றிலும் மழுங்கடிக்கப்படலாம்
அல்லது சிதைந்தும் விடலாம்.
உணர்வுகள் சற்றே கூடுதலாக
ஒத்துழைப்பின்
ஒற்றைச் சொல்லிற்கு எப்போதும்
அடுத்தவர்களை ஆளும் திறம்
உறுதியாக உண்டு.
அலையென வந்து விழும்
தட்டையான சொற்களின்
கடைசி வார்த்தை அல்லது
கடைசி சொல்
நிச்சயம் மக்களின் ஒருசேர்ந்த
கைதட்டலைப் பெறும்.
உபயோகிக்க மறந்து
தூசி தட்டிப்பார்க்கும் சொற்களும் உண்டு.
அதிகம் உபயோகித்து
அளவிற்கு மீறி தேய்மானமாகி
உருக்குலைந்த சொற்களும் உண்டு.
இப்படியாக சுதந்திரம் இழந்த சொற்கள்
குறைந்த பட்சம் நம்மிடம் எதிர்பார்க்கும்
அவைகளை நாம் எந்தவித எதிர்ப்பின்றி
ஆளும் போது
ஒரு சிறிய அனுமதி
அல்லது
ஒருவரின் மொழி ஆளுமை குறித்த
தயக்கத்துடன் கூடிய
பணிவான பிரகடனம்.

எழுதியவர் : பிரேம பிரபா (20-Mar-13, 9:21 pm)
Tanglish : sorkal
பார்வை : 120

மேலே