எழில் தொலைத்த நான்.....
உச்சங்கள் தொட்டிருக்கிறது
வாழ்க்கை.....
அவ்வருடத் தீபாவளிகளின்
மொத்த சில்லறை வியாபார
மஞ்சள் முத்திரைப் பைகளின்
புத்தகத் திணித்தல்களைக்
கடந்து.......
மரணத்தின் பொருள்வலியறியா
நாட்களில்
பணியாரப் படையல்களுக்காய்
அம்மாச்சிகளை
சாகப் பணித்த வெள்ளந்தி
நிர்ப்பந்தங்கள் கடந்து...
உங்களுக்கேன் பாப்பா
இல்லையென மணமாகா
சித்தி அத்தைகளிடம்
கூட்டங்களில் கேட்டுத்
தொலைத்து விழித்த காலங்கள்
கடந்து..
பச்சைக்காய் மரங்கள் கண்டு
பளிங்கு புதைத்து
அறுவடைக்க முனைந்த
வினோத விஞ்ஞானக் கேள்விகள்
கடந்து...
பன்னாட்டு கோழிப் பொரியலும்
கோலா பாட்டில்களுமாக
எச்சங்கள் பூசி வளர்த்தி
உச்சங்கள் தொட்டிருக்கிறது
வாழ்க்கை..