கருத்தப் பாண்டி(தொடர் )-பகுதி -25

@@@@@@@@@@@@@@

“சாரே என்னத்துக்கு இத்தனை சத்தமா பேசறேள். அவா எழுதறது நியாயந்தானே, கேட்டியளா? சாரே நாராயணன் அப்பவே சொன்னான். ஏன் இந்த மாதிரி எல்லாம் சங்கருக்கு லெட்டர் வருதுன்னு.
பதி, பசு பாசம்ன்னு கேட்டு இருக்கியளோ? பதி, பசு, எப்படி ஆதி அந்தம் இல்லாம இருக்குமோ அதே போலத்தான் சாரே இந்த பாசம்! பாசம் பிராண சங்கடம்! நாச சத்ரு! அவா அவா ஏதோதோ வியாக்யானம் சொல்லுவா! ஆனா பாசம் என்றது வேறே ஒண்ணும் இல்லே கேட்டியளா..! பிசாத்து தான் அது, கேட்டி்யளோ!

@@@@@@@@@@@@@@

மேலே பௌர்ணமி நிலா உலா போகத் தொடங்கியது! மேகங்கள் மூடுவதும், விலகுவதுமாய்!

அந்த வீட்டின் காம்பௌண்ட் சுவர் அருகில் இருந்த பவழமல்லிகைச் செடியில் இருந்து பூக்கள் பூத்து கீழே விழுந்துஒரு வித மணத்தை எங்கும் பரப்பி விட்டிருந்தது. பூக்களில் காம்பு மேல் நோக்கியவாறு கீழே விழும் பவழமல்லி, மலர்களில் ஒரு தனி ரகம்.
பொன்னுத்தாய் ஒரு சில பூக்களைப் பொறுக்க ஆரம்பித்தாள்.

“ஏன் மாமா... அந்த நிலாவையே அப்படி ஒரு கணக்கா பார்த்துக்கிட்டே இருக்கியே...” என்ற சங்கரலிங்கத்தின் குரல் கருத்தப்பாண்டியின் கவனத்தை கலைத்து விட்டது!

கருத்தப்பாண்டி தன்னுடன் இணைந்து போயிருந்த பௌர்ணமியின் கதையைச் சொல்லி முடித்தார் அவர்களுக்கு.

தன் கண்களில் பாலனின் நினைவலைகளால் எழுந்த கண்ணீர் துளிகளைத் தொடாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார்.

அப்போது கடிகாரம் மணி 2 என அடித்து ஓய்ந்தது!
பக்கத்து வீட்டு பாட்டியின் இருமல் சத்தம் அதிகமாகக் கேட்டது.

விளக்குகள் அந்த வீட்டில் எரிந்தன. ஆட்டோ கொண்டு வந்த பாட்டியின் பேரன் நாராயணன் பாட்டியை பக்கத்தில் இருந்த 24 மணி நேர நர்சிங் ஹோம்க்கு கொண்டுப் போனான். அங்கே பாட்டிக்கு ஒரு "டெரிபிளின்" ஊசிப்போட்ட பிறகு இருமலும், இழுப்பும் நின்று அதிகாலையில் வீட்டிற்குத் திரும்பி வருவாள்! இது வழக்கமான ஒன்று!
பாட்டியின் மகள் வயது 65 இருக்கும்!

“என்ன மாமி... பாட்டிக்கு இன்னைக்கும் நோவா” பொன்னுத்தாய் கேட்டாள்!

“ஆமாம்... என்ன பன்றது. பகவான் அவளை அழைச்சுண்டுப் போக மாட்ரான்! எத்தனை இம்சைப் படறா தெரியுமோ? நீங்கள் எல்லாம் இன்னம் உறங்கலையோ? நானாக்கும், உன்னை இம்சிக்க வேண்டானிட்டு வர்லே ­ அசதியா இருக்குமில்லையா? சார் வந்தாச்சோனா? பாவம் நீ... எத்தனை நாளெக்கு இப்படி கஷ்டப்படுவாய்! இன்னெக்கும் சிவராத்திரியா! ஆரு வந்திருக்கா. உன் மாமான்னு சொன்னியே. அவரா...! தன் வீட்டை விட்டு இறங்கி வந்து கருத்தப்பாண்டியைப் பார்த்து.

“நானாக்கும்! நமஸ்காரம்! பக்கத்தாத்திலே இருக்கிறேன்! சாப்டாச்சோன்னா? இவா ஆத்திலோ ராத்ரி பத்து மணிக்குத்தான் பொன்னுத்தாய் உலை வைப்போ? ஏன்னா, சார் அதற்குப்புறம் தான் வருவார்!”

“மாமி இன்னைக்கு ஏதும் கடிதாசு வந்துதா” என்று கேட்டாள் பொன்னுத்தாய்!

“பாத்தியா... மறந்து போனேன். ஷமிக்கணும் சாருக்கு ஒரு வார்டு வந்தது கேட்டியோ!” என்று சொல்லித் தன் வீட்டிற்குப் போய் காம்பவுண்ட் பக்கத்தில் நின்று கொண்டே பொன்னுத்தாயைக் கூப்பிட்டு கார்டை கொடுத்தாள் மாமி!

கார்டை வாங்கிப் படித்தவள் சட்டென்று கிழித்துப் போட்டு விட்டாள்!

“ஏலே... பொன்னுத்தாயி ஏன் இப்படி செய்யறவ. சங்கரய்யா பார்க்க வேண்டாமா? அது என்ன ஏதும் கருமாதி லெட்டரா?” என்றார் கருத்தப்பாண்டி.

“ஆமா மாமா... இது எழவுக்கடிதம்தேன்!... அப்பப்போ வரும்...

கீழே வீழ்ந்த கிழிந்தகாகிதத் துண்டுகளைப் பொறுக்கி ஒன்றாக இணைத்துப் படித்தான் சங்கரலிங்கம்.

“... பயலே, உடனே நீ அலுவலகத்தை விட்டு வெளியே வரலேன்னா, உன் பையனை பொணமாத்தான் இந்திரா கந்தி சிலைக்கு கிட்டக்க பார்ப்பே! ஏண்டா... மவனே நீ பொழைக்க வேண்டாம் ­ பொழைக்க நினைக்கிறவனை ஏண்டா தடுக்குற... இதுதான் கடைசி எச்சரிக்சை உனக்கு... என்ன நடக்குதுன்னு.பாரு ...”

“பொட்டப்பயலுவகளா... மொட்டைக் கடிதமா போடறீங்க” கத்தத் தொடங்கினான் சங்கரலிங்கம்!
அதிர்ந்து போனார் கருத்தப்பாண்டி!

இது என்ன சங்கரய்யாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு பக்கமா? உள்ளே குழந்தையின் குரல் கேட்டு பொன்னுத்தாய் போனாள். திரும்பி வரும்போது குழந்தையின் கையில் புது ஜிப்பா இருந்தது.

“அய்யா... என் அய்யனைப் பார்த்தப் பொறவு போட்டுக்கரேன்னு சொன்னியளா... இதா இப்போபோட்டுக்குங்க... மேலுக்கு குளிர் அடிக்கும் இல்லா” என்று தன் பிஞ்சு விரல்களால் ஜிப்பாவை நீட்டின குழந்தையை அப்படியே வாரி இழுத்து அணைத்துக் கொண்டார் கருத்தப்பாண்டி.

“பாவி பயலுவளா... இந்தப் பிஞ்சை நசுக்கி
நாசமாக்கிடவா மொட்டைக் கடிதம் போடறீயே” என்று தனக்குள் நினைத்து வருந்தினார்!

மாமிதான் இப்போது பேசினாள்!

“சாரே என்னத்துக்கு இத்தனை சத்தமா பேசறேள். அவா எழுதறது நியாயந்தானே, கேட்டியளா? சாரே நாராயணன் அப்பவே சொன்னான். ஏன் இந்த மாதிரி எல்லாம் சங்கருக்கு லெட்டர் வருதுன்னு.
பதி, பசு பாசம்ன்னு கேட்டு இருக்கியளோ? பதி, பசு, எப்படி ஆதி அந்தம் இல்லாம இருக்குமோ அதே போலத்தான் சாரே இந்த பாசம்! பாசம் பிராண சங்கடம்! நாச சத்ரு! அவா அவா ஏதோதோ வியாக்யானம் சொல்லுவா! ஆனா பாசம் என்றது வேறே ஒண்ணும் இல்லே கேட்டியளா..! பிசாத்து தான் அது, கேட்டி்யளோ! கெட்டதை நெனைக்குறவா செய்யறவா, பேசறவா அநியாய வழிவிலே போறவா இவாளை எல்லாம் நாம் ஜெயிக்க முடியாது தெரியுமோ கலியுகத்லே...
ஏன்னா சைத்தான் கூட்டம்னா பெருகிப் போயிட்டு! பகவான் ஆனா ஒரு நாளைக்கு அனுக்கிரகம் பண்ணுவார். இது சாத்தியம் தான் ­ சத்தியந்தான்! ஆனா அது வரைக்கும் நாம படற இம்சை இருக்கே... வேண்டா சாரே! மொட்டைக்கடிதம் தானேனுட்டு, பயப்படாம கிழிச்சுப் போட்டுடலாம். ஆனா... ஒதுக்க முடியாது கேட்டியளா?"

“குலைக்கிற நாய் வேட்டைப் புடிக்காது மாமி”

“வாஸ்தவம், ஆனா ஊரையே உசுப்பி விட்டுடும் கேட்டியளா! நாயின் சப்தம், யாராவது நாலைஞ்சுப் பேரை யோசிக்க வைக்கும் சிரங்கு பார்த்த விரலும், அக்கப்போரை கேட்ட காதும் சும்மா இருக்காது தெரியுமா? அவா அவா வாய்க்கு வந்தவாறு, பேசுவா! எதனாச்சும் சும்மா பேத்தறதுன்னா, இந்த மனுஷசாதிக்கு பாயாசம் மாதிரி, கேட்டியளா! நீங்க பிரம்மச்சாரியா இருந்துண்டியன்னா, பிரச்சினையே வேறே! ஆனா நீங்க சம்சாரி இல்லையோ! சம்சாரி வீணா புரளியில் அடிப்பட்டா, லௌகீகத்தில் புழுதின்னா படியும்!”

“ஏன் மாமி... இந்த மாதிரி மொட்டைக் கடிதங்கள் இன்னைக்கு நேத்தா வருது” தூங்கி விழுந்த குழந்தையை கருத்தப் பாண்டியிடம் இருந்துப் பெற்றுக்கொண்ட பொன்னுத்தாயி பேசிக்கொண்டே உள்ளே போனாள்!

“இங்கே பாருங்கோ! வதந்தியாலே நான் என் வாழ்வையே இழந்துண்டு நிக்கறேன். தீர்ர்க்க சுமங்கலியா தான் நான் மரிச்சுப் போவேன் கேட்டியளா! ஏன்னா என்னோட ஆத்துக்காரர் இன்னமும் உயிரோடத்தான் இருப்பார். எங்கேயாவதுன்னு ஒரு நெனெப்பு! இரண்டாவது பையன் நேக்குப் பொறந்தான். நல்லா கறுப்பா பொறந்துட்டான். பிசாத்து முதல்லே சந்தேகமா அவர் மனசுலே நுழைந்தது. பின்னால் என்னைப் பிடிக்காதவா வதந்தியால புகை மூட்டம் பண்ணினா ­ மனுஷன் ஒரு நாள் விடிகாலைடியிலே தர்ப்பையைப் போட்டு எரிச்சுட்டு, எனக்கு ஒரு ஸ்நானம் பண்ணிட்டு ஓடியே போயிட்டார்! வெத்து புரளியை உண்மையினு நம்பிடர லோகத்லே எத்தனையோ பேர் இருக்கா கேட்டியளா! இந்த மொட்டைக் கடிதங்களே கொஞ்ச நாள் கழிச்ச, நோக்கு பழகிப் போயிடும் கேட்டியளா! பின்னே வக்கிரமும், வறட்டு அழீச்சாட்டியமும் உங்களை சர்ப்பம் கணக்கா காலை வளைச்சு, சுத்தி சிக்கிடும். முதல்லே இந்த சனியன் பிடிச்ச ஜோலியை விட்டு வாங்கோ, கேட்டியளா? எங்காத்லே வந்து நாலைஞ்சுப் பேர் கேட்கிறா ­ என்னமோ ஆள் வேலைக்கு எடுத்தியளாமே! எவ்வளவு பணம் கொடுக்கணும் ­ எங்கே கொடுக்கணுமிட்டு கேட்டியளா!"

கருத்தப் பாண்டி வருவான் மீண்டும்..

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ )அகன் (21-Mar-13, 7:06 pm)
சேர்த்தது : agan
பார்வை : 102

மேலே