நெருப்பில் வேகும் மூச்சு

அடுப்பில்
விறகோடு அடுக்கப்படுகின்றது
எமது ஏக்கங்களும் ,
எதிர்பார்ப்புக்களும்...

அடுப்பூதப் படிப்பெதற்கு
என்ற காலம்
கொஞ்சம் வளர்ந்து
படித்துவிட்டு
அடுப்பூதும்
பரம்பரையில்
நானும்...

மெச்சாத நாவுக்காய்
அறுசுவை படைக்கும்
இயந்திரப் பெண்கள்
நாங்கள்!

கறிக்கு உப்பாகி
அடுப்புக்கு விறகாகி
நெருப்பாய் எரிகின்றன
உள்ளத்து உணர்வுகள்.

காய்ச்சலோ
கர்ப்ப உபாதையோ
காரணங்கள் அல்ல.
சமைப்பது எமக்கு
சட்டமாக்கப்படாத சட்டம்.

பெண்ணென்றும்,
பெண்சாதி என்றும்
எம்மைப் பார்த்தது போதும்.

எவரேனும்
ஒருமுறையேனும்
பாருங்கள் ...
எம்மையும்
“மனிதர்” என்று.

எழுதியவர் : அஸ்மா மஜிஹர் (24-Mar-13, 11:39 am)
பார்வை : 84

மேலே