தற்காலிக சிறைவாசம்

வெறிச்சோடி
வெறுமையைப் பரப்பி
வெற்றுக் குப்பைகளை தாலாட்டி
வெயில் படர அடங்கிப்போனதந்த வீதி !

சூரியக் கதிர்கள்
சூடுபிழிய இறக்குவது
ஈரமில்லா மழையெனவும்
ஈட்டித் தந்ததோர் கற்பனை இதமாக !

மின்வெட்டும்
மிரட்டித் தன்பங்குக்கு
மிகையழுத்தத்தில் கைதியாக்க
மிச்சப்பட்டதுவோ தற்காலிக சிறைவாசம் !

அவ்வேளையில்
அவசரத் தேவைகளுக்கு
விடுதலையாகும் சக்கரங்கள்
விரைந்து இட்டதுவோ புழுதிக்கோலங்கள் !

விரிதலைக் கூட
விருப்பமின்றி செய்துவிட்டு
விழிபிதுங்கிய சோர்வில் காற்றும்
வியர்வைகளைப் பருகி வெக்கை தணிக்கும் !

ஓரிரு
ஒற்றைக்கால் மரங்களும்
ஓய்வறைகளைத் துவக்கியபடி
ஒன்றிய கவனமாய்த் தனது சேவையில் !

மதியவேளை
மந்தத்தை உண்டுவிட்ட
பொழுதின் செரிக்காத திணறலிலோ
பொசுங்கிக் காணாமற்போனது நீர்மிச்சங்கள் !

காலச் சுழலில்
கடந்துபோன இந்நிகழ்வுகளைத்
தாங்கித் துவக்கப்பட்ட அடுத்தவேளை,
தாழ்திறக்கக் கெஞ்சும் அந்திமாலையானதில் ,

மெல்ல
மேய்கின்ற ஆடுகளாக ,
வாசற்படி ஓரங்களில் இறங்கியது
வாய்க்குள்ளே அடைபட்டிருந்த அரட்டைகள் !


(ஹஹ்ஹஹா இக்கவிதையை முடிப்பதற்குள் மழை பெய்யத் தொடங்கிவிட்டது அந்த அடங்கிப் போன வீதியில்...)

எழுதியவர் : புலமி (25-Mar-13, 7:20 pm)
பார்வை : 123

மேலே