அப்பா கற்றுக்கொடுத்த சதுரங்கம்

உடன்பாடுகள் துளி கூட
சாத்தியமில்லாத விகிதத்தில் அமைந்த
புகுந்த வீட்டு உறவுகளை
சமன் நிலைக்குக் கொண்டுவர
கண்டு பிடிக்க வேண்டும்
புதுப் புது யுக்திகளை.
தனித்துப் போராடும் போது
தவிப்புடன் கூடிய
பெரிய எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது
எனினும் எந்த விதத்திலும்
தளர்ந்து விடக் கூடாது என்பதில்
மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.
எனக்கும் புது உறவுகளுக்குமான
பொதுவான குணங்கள்
ஏதோவொரு துளியில்
நிச்சயம் இருக்குமென்ற முழு நம்பிக்கையில்
நகர்த்த வேண்டும் மனித மனங்களை.
உறவுகளின் அன்பை துளியும் வீழ்த்தி விடாமல்
புகுந்த வீட்டு மனங்களை
நான் வெல்வதைக் கண்டு
நிச்சயம் மகிந்திருப்பார் என் அப்பா
இன்று அவர் உயிரோடிருந்திருந்தால்.