கனவுகளைப் பேசுகிறேன்...

கண் மூடிய நேரத்தில்...

கண்களுக்கு மிக அருகில் இருந்தது அது.
சற்றைக்கெல்லாம் ...
கொஞ்ச தூரத்தில்...
வண்ணமாய் வியாபித்திருந்தது அது.

பிறகு...
அறையெல்லாம் நிரம்பி இருந்தது.

அதன் பிறகு-
எங்கே போனதென்று தெரியவில்லை...
இந்தக் கனவு.
************************************************************************
மொட்டாய் இருக்கும் போதே-

அவள் பார்க்காத நேரத்தில்...
முத்தம் தருவது போல்
மெலிதாய் இதழ் விரித்து மூடிக்கொள்ளும்
இந்த மொட்டு.

வந்து தலை தடவி...
பேசிச் செல்லும் அவளிடம்...
இதழ் விரித்து...தலை அமர்ந்து...
தனது காதல் சொல்லத்
கனவுகளைக் கோர்த்துக்
காத்திருந்தது.

ஒரு மழை நாளில்-
யாரும் எதிர்பார்க்காமல் உதிர்ந்து விட...

மழை நீரில் கலந்த
கண்ணீரைப் பிரிக்கத் தெரியாமல்...

முறிந்த உறவைப் பேசிக் கொண்டிருந்தன...
இரண்டு வெவ்வேறு... கண்ணீர்த் துளிகள்.
**********************************************************************
எதையோ அருந்தியது போல்...
நிலை கொள்ளாமல்...
அலைந்து கொண்டிருந்தது இந்த எறும்பு...
அவளின் காலைச் சுற்றி.

அங்கும் இங்குமாய்...
ஓடி..ஓடித் திரும்பிய அதன் ஆட்டம்...
யாருக்கும் பிடி படுவதாய் இல்லை.

அவளுக்குப் பக்கவாட்டாக நகர்ந்து...
தன் தலை சாய்த்து...
அவளை...அப்படி ஒரு பார்வை பார்த்தது.
பின்...
இந்தப்புறமாகவும் வந்து அதையே செய்தது.

பின் மெதுவாக ...
அவளின் காலை முத்தமிடுவது போல்...
தன் உதடுகளால் உரசிச் சென்றது.

வெகு நேரமாய்....
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நானோ-
இந்தப் பொருந்தாக் காதலை...
எந்தக் கவிஞன்...எனது மொழியில்...
எழுதிவைப்பான்....
என வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
***********************************************************************

எழுதியவர் : rameshalam (30-Mar-13, 8:20 pm)
பார்வை : 84

மேலே