களம் வீழ்ந்த ஒரு குழந்தை பற்றியது

நெடிய நாட்களின் பின்பு
நிசப்தங்களை விழுங்கி பருத்திருந்தது இரவு
எண்ணற்ற மிலேச்சத்தனங்களால்
பார்வதியொருத்தியின் கருவில்
மீளவும் சூல் கொள்ளும் புரட்சி
தாய் நிலமே வெடித்து புல்லரித்திருக்கும்
இவை போல எத்தனையென்றாலும்
தந்து கொள்ளத் தயார்
ஜென்ம தேசத்திற்காய்
எனவுரைத்த பாலகனின் உயிர் பூத்த
இறுதி நிமிடக் கல்லறைப் பார்வையால்
வலிந்து மூடிய உலக விழிகளுக்கு முன்பு
பிஸ்கட்கள் கொரித்திடும் சத்தத்தில்
வல்லூறுகள் குருவிக் குஞ்சை விருந்தாக்கியிருக்கிறது
புதைகுழி வடிவங்களில் குழந்தைகளின் கூறியீடாய்
ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்துடன்
துரோகத்தின் விசை நேர்த்தியாக்கியிருக்கிறது
மரண வாசலை
அவன் புகைப்படத்தையும்
எம் எலும்புகளையும் பரப்பி வைத்து
பிரபஞ்ச மனச்சாட்சியிடம் நீதி தேடும் முன்பு
உறுதிப்படுத்தியே தீரவேண்டும்
தேசத்தின் எல்லைச் சுவர்களை பலப்படுத்த
இன்னுமிருக்கின்றன நாங்களாய் எங்கள் சவங்கள் .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (10-Apr-13, 8:44 pm)
பார்வை : 155

மேலே