பிரிய மனமில்லாமல் சில பிரிவுரைகள்

பிரிய மனமில்லாமல் சில பிரிவுரைகள்

சித்திரை என்றாலே
என் வருகைக்காக
வாசல் விளக்கிட்டு
காத்துக்கிடக்கின்ற சிலமனங்கள்

எதோ ஒரு காரணங்களை
எதன்மேலேயாவது திணிக்க
பொய்யென அறிந்தும்
ஆறுதல் கூறி அழுகின்ற மனங்கள்

தேடினாலும் கிடைக்காத
எங்கேயோ தொலைத்துவிட்ட
அர்த்தங்களை தேடுவதறியாமல்
வெறுப்புகளை கொட்டுகிறேன்,,

புரிந்துக்கொண்டும் சிரித்தபடியே
ஊசலாடுகிற தொங்குநிலை மனங்கள்

கிழிக்கத் தவறிய
நாட்காட்டியின்
தினசரி இராசிப்பலன்
சொல்லுகிறது
எதிர்ப்பார்த்தவர்களினால்
இன்பங்கள் கிடைக்கும் நாளென்று ,,

நாட்கள் பல கடந்தும்
நாட்களாகியிருப்பதை
மறந்தவனாய் நடக்கிறேன்

படுக்கையில் விழுந்ததும்
பலக்கால தவமிருந்தவனாய்
கிடந்துறங்குகிறேன் இறந்தவனை போல்

இருபது முப்பது அழைப்புகளை
தாண்டிய குரலொலி அஞ்சல்கள்

அலறியப்படியே இருக்கும்
ஆடம்பர கைப்பேசியை
அலட்சியமாய் பார்த்தும்
தொடருகின்ற அன்புக்கதறல்கள்

போகாத பண்டிகைக்கு
என்றோ ஒருநாள்
எடுக்கப்படும் துணிமணி,,,
"அவனுக்கு புடிக்குமே
அந்த இளஞ்சிவப்பு நிற
கோடிட்ட சட்டை" என்று

வாங்கிவைத்த நாள் முதல்
திண்ணைவிளக்குத் தோழனுடன்
என்வரவைச்சொல்லி ஏமாந்த மனங்கள்

ஏதோ ஒருநாள்
போய்விட்டால் போதும்
தோளுக்கு மேலாய்
வளர்ந்தவனாய் இருந்தும்

எட்டமுடியாத
என் முதுகினையும்
தட்ட முடியாத
என் தலையினையும்
இருமிக்கொண்டே
எண்ணையிட்டு தட்டுகிறபோது

நகக்கீரலால்
பட்ட இடம் வலித்துவிட ,,
தேளாய் கொட்டுகிற
என் வசைகளையும்
தாங்கிக்கொண்ட இளகிய மனங்கள்

தங்கம் தம்பி குளிச்சுட்டான்
என்று சொல்லும் முன்னமே
சூடான பண்டங்கள் எடுத்து
தட்டு நிறைய வைக்கும்
சகோதரியின் முகம் கெட,

"இவ்வளவு வச்சி யே என்
உசுர எடுக்கற என்னும்
மிளகாய்ப்பொடி தெறித்த
பேச்சிலும்" அடக்கிக்கொண்டே
அடுக்களைமனை சுவரோடு
சேர்ந்து கண்ணீர் சிந்திய மனங்கள்,,,,

இருக்கின்ற இருநாளில்
இருவார்த்தை பேசிவிட
இரவுவரை காத்துக்கிடந்து
கதவு தட்டிய விருந்தாளியாய்
நடுக்கப் புன்னகையோடொரு தயக்கநடை

வலுவிழந்த கைகளால்
என்கால்களை பிடித்துவிட
அக்கறையாய் விசாரித்தபடி
அருகிலே வந்தபோது
முகமுயர்த்தி நான்
பார்த்துவிடாத அந்தமனங்கள்,,,

வீடும் இருக்கிறது
வாசப்படியும் கோலமிடாமல்
அடுத்த வீட்டு வாசபாடியை
பார்த்தபடி பாவமாயிருக்கிறது,,

சித்திரையும் வந்துவிட்டது
திண்ணை விளக்குத்
தோழனும் காத்திருக்கிறான்
மனங்களைமட்டும் ஏனோ காணவில்லை,,,

அனுசரன் ,,,

எழுதியவர் : அனுசரன் (14-Apr-13, 3:00 am)
பார்வை : 244

புதிய படைப்புகள்

மேலே