நம்பிக்கை

நம்பிக்கை வெகு காலமாய்
கட்டிய மனைவியாகக்
காத்துக் கிடக்கிறது
உன் விழி அசைவுக்கும்...
விரல் நுனி தொடுகைக்கும்..
காலத்துக்கும் துணை வர...

நீயோ விவாகரத்துக் கேட்டு
மனம் என்னும் நீதி மன்றத்தில்
வாதிட்டுக் கொண்டிருக்கிறாய்
உயிர்கொல்லி நோய் தொற்றிய
சலனம் எனும் சக்களத்தியின்
சுகத்தில் திளைத்தவனாய்...

நம்பிக்கை மனைவிக்கு எதிராய்
அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை
அடுக்குகிறாய்...
விரக்தி ஒரு
தேர்ந்த வழக்குரைஞராய்
தீவிரமாக வாதிடுகிறது
நம்பிக்கைக்கு எதிராய்...
கவலை பயம் என்ற
பொய் சாட்சிகளின்
துணை கொண்டு...
நம்பிக்கையை வென்று விட...

வாதங்களை
வைத்து மட்டுமே
தீர்ப்புச் சொல்ல மனமின்றி
அனுபவம் எனும்
சட்டப் புத்தகங்களை
துழாவிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை எனும் நீதிபதி...
ஒரு மரண தண்டனையை
தவிர்க்கும் முழு ஒத்திகையோடு...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (14-Apr-13, 8:44 am)
Tanglish : nambikkai
பார்வை : 313

மேலே