நண்பர் விண்ணப்பம்
நதியின் நளினம்
தென்றலின் மென்மை
தேனின் இனிமை
வானின் தனிமை
இவை அனைத்தும்
தோற்றுப்போனது
உன் அழகின் முன்னால் . . .
உன்னையே அறியாமல்
நீ அனைத்தையும் வென்றுவிட்டாய்
உன் அழகான கண்ணால் . . .
இதுவரை உன்னைக்காட்டிலும்
அழகைக் கண்டதாய்
நினைவில்லை . . .
அப்படியே இருந்தாலும்
அவர்கள் யாரும்
என் நினைவில் இல்லை
பயந்து பயந்து
பரீட்சை அறையில்
பதில் கேட்க
பத்து இரண்டு நொடிகள்
பேசி இருப்போமா
பத்து வார்த்தை
தாண்டி இருக்குமா
பத்து நிமிடம்
போலிருக்குது
பத்து நாள்
சுகம் கொடுக்குது
படிக்குக் கூட
வலிக்காமல் நடக்கும்
பாதம் கொண்ட
பட்டாம்பூச்சி . . .
என் இதயம் கிழித்தது ஏன் ??
அடி !
சிரிப்பால் சிறகுகள்
தந்தவளே .
நீ அறிவாயா ?
உன்னைப் பார்க்க
அட்டவணை ஒன்று
என்னிடம் உண்டு
காலை
நீ வரும் வழியில்
சில நிமிடம்
பின் வகுப்பறையில்
சில நிமிடம்
பத்து நிமிட
இடைவேளையிலும்
ஒரு இருபது நிமிடம்
உனக்காய் ஒதுக்குகிறேன்
உன்னைக் காணும்போது மட்டுமே
நிமிடங்கள் கூட
என் மகுடங்களாய்
மாறி போகிறது
போருக்காய்க் காத்திருக்கும்
ஒரு தொழில் முறை
போர் வீரன் போல்
உன் அங்கீகரிப்புக்காய்
முகநூலில் காத்திருந்த
அந்த நாள்கள்
இன்னும் நீள்கிறது .
இன்னுமா புரியவில்லை
உனக்கு
என் கண்கள்
பேசும் வார்த்தைகள் . . .
உன்னைக் கண்டவுடன்
நான் கொள்ளும்
தயக்கங்கள்
உன்னுடன்
பேச வரும்போது மட்டும்
என்னுள் தோன்றும்
நடுக்கங்கள்
ஒ ! புரிந்ததால் தான்
இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையா
என் நண்பர் விண்ணப்பத்தை