என் மந்திரகாரிக்காய் சில வரிகள்
கையில் பொய்க்கட்டு,
வாயில் பொய்யாய்
முனங்கல்கள்,உடனடி
தேவை மனைவியின்
கவனமும்,கருணையும்!
****************************************************************************
மனைவியை பிரிந்து
அலுவலகம் செல்லும்
பொழுது மட்டும்
பழுதடைந்து போகும்
என் துள்ளுந்தின்
இரு சக்கரங்களும்!
****************************************************************************
மனைவியின் கூந்தலில்
ஏறி,காய்ந்து
விழும் பூக்களுக்கு
மட்டும்,என்
சட்டை பையில்
ஆயுள் சிறை!
****************************************************************************
மனைவியின் எச்சில்
நீரும்,என்
உச்சி முதல்
உள்ளங்கால்வரை போதை
ஏற்றும் பானமாய்!
****************************************************************************
எனக்கு மனைவியின்
மடி தேவைப்படும்
பொழுது எல்லாம்
அய்யோ தலைவலிக்குதே
நான் செய்யும்
நாடக அரங்கேற்றம்!
****************************************************************************
நான் குளிக்கும்
வேளைகளில் மட்டும்
வெறும் அலங்கார
பொருளாய் என்
வீட்டு குளியலறை
கதவின் தாழ்பாள்!
****************************************************************************
பந்தியிலும் படுக்கையிலும்
வேண்டாம் என்றால்
வேண்டும் என்றே
எதிர்மறை அர்த்தப்படுகிறது!
சற்று தள்ளி
தூங்கிய என்னை
நெருங்கி வந்து
தள்ளி போடா
என்கிறாள்,நானோ
அவளை இறுக்கி
கட்டியணைத்து தூங்குகிறேன்!
****************************************************************************
அவளிடம் அன்பாய்
பால் பருகிவிட்டு,
என்மேல் சிறுநீர்
கழித்து ஏளனமாய்
சிரிக்கிறான்,எங்கள்
வீட்டு எட்டுமாத
குட்டி பயல்!
****************************************************************************
என் வீட்டின்
துணிதுவைக்கும் இயந்திரம்,
மாவரைக்கும் இயந்திரம்,
சமையல் அடுப்பு,
குளிர் பெட்டி
என எல்லா
சாதனங்களும் வாய்விட்டு
கதறி கதறி
அழுவது என்
விடுப்பு நாட்களில்
மட்டும்!
****************************************************************************
விடுப்பு நாள்
தனிமையில் இருவரும்
நண்பர்கள் எனைத்தேடி
வந்து விட்டால்
மனதுக்குள் சபித்தபடி
சிரித்த முகத்தோடு
தேநீர் கொடுப்பாள்
ஒன்று சக்கரை
அளவுக்கு அதிகமாய்
இல்லை அளவுக்கு
சற்றே குறைவாய்!
****************************************************************************
பூமியில் சொர்க்கம் வேண்டுமா?
அதில் நீங்கள் தேவனாய் இருக்கவேண்டுமா?
மனைவியை மனத்தால் புரிந்து கொள்ளுங்கள்!
மனைவியை காதலியுங்கள்!
-அன்புடன் நவீன் மென்மையானவன்