என் புது வீடு ......

சுவர்கள் எழுப்பப் பட்ட என் புது வீட்டில்
வண்ணங்கள் பூசி மறைக்கப் பட்டுவிட்டன
அம்மா அப்பாவின் கை ரேகை தடயங்கள் !

புது வீட்டின் கதவினைத் திறந்திடும்
சமயங்கள் யாவும் குனிந்தே செல்கிறேன் !
என்னைவிட உயரமாய் நிலவுகாலிருந்தும்!

புதியவீட்டில் பிரிக்கப் பட்டுவிட்டது
ஒட்டுமொத்த குடும்பத்தின் அன்பும் !
எனக்கோர் அறை, அம்மா,அப்பாவுக்கோர் அறை ,
தாத்தா,பாட்டிக்கோர் அறை என !

இடி இடிக்கும் போதும் ,
மழை பெய்யும் போதும் ,
என்னை அறியாது ,
வீட்டினுள் பாத்திரங்களை
ஆங்காங்கே நான் எடுத்து வைக்கும் போது,

மெல்ல தலை வருடி அம்மா கேட்கிறாள்
ஏம்பா இன்னும் நம்ம பழைய
குடிசை வீட்டை மறக்கலையா ?என்று !

எழுதியவர் : ராஜேஷ் ப (19-Apr-13, 3:40 pm)
பார்வை : 2168

மேலே