விளம்பர இடைவேளைகளில்......

பாதாளச் சாக்கடைகள்
பெருகி வழிந்தோடுகிறது
சர்க்கரை முலாம்
பூசிக்கொண்டு.....

புரதக் கூறுகளேற்றி
கூந்தல் வளர்க்கும்
அறிவியல் சூனியங்கள்
கடந்துபோகும் இந்த
நொடிப்பொழுது நெடிக்கூடங்களில்....

வெள்ளைத்தோல்
மிகைப்படுத்த நம்
சொந்தச் சுயங்களை
கோமாளிச் சித்திரங்களாக்கும்
இந்த சிற்றிடை வெளி
மழுங்கல் கோடரிகள்....

கூடவே சிரித்து மிரட்டும்
மோகினிப் பிசாசொன்று
மெலனின்களைக் கொல்லுவதாய்...
நுண்ணுயிரிப் போராளிகளின்
வரலாறு மறைத்து
வதைத்தழிக்க வகுப்பெடுக்கும்
இந்த விரல்சொடுக்கு
இடைவெளிகள்..

கொழுப்பு வறுவல்
அட்டைப்பைகளும் கரியமிலக்
காற்றடைக் குப்பிக்களுமாய்
வண்ண விளக்கடியில்
பன்றிகள் நினைவூட்டிச்
சிரித்துப் போகும் மற்றுமொரு
நான்கு வினாடி....

தொடர்ந்து வந்துவிழும்
வாசனைப் பூச்சுக்காய்
கொழுந்தனை வாரியணைக்கும்
அண்ணிமார் கதையொன்று.. என்
கலாச்சாரக் காடுகளில்
விடம் விதைத்துப் போகும்...

ஒருவழியாய் ஓய்ந்தடங்கி
கும்மியடி தூளிப் பாட்டுக்காய்
குடும்பமாய் அமர்கையில்
அடுத்ததாய் ஒரு
இடைவேளை ... என்
இருக்கைகளுக்கிடையில்
புழுக்கள் தூவியோடுகிறது
மாதவிடாய் துணிப்பை
விளக்கங்களோடு....

எழுதியவர் : சரவணா (22-Apr-13, 7:58 am)
பார்வை : 111

மேலே