தொங்கு ராஜா!!!

என் பூர்வஜென்ம
கவலைகளையும் சேர்த்து,
அவன் காரணம்
இல்லாத பூக்கும்,
ஒற்றை புன்னகையால்
மறக்கச்செய்து விடுகிறான்!!!
********************************************************************
என் ஆயுளுக்கும்
நான் இதுவரை
கிறுக்கிய அத்தனை
கவிதைகளையும்,அவனோ
எழுதுகோலையும் சரிவர
பிடிக்க தெரியாது,
எழுதிய எழுத்துக்களில்
தோற்கடிக்கச்செய்து விடுகிறான்!!!
********************************************************************
ஆதவன் முளைக்கும்
முன்னமே,அவன்
முழித்து என்மீது
தவழ்ந்தபடி என்
முகத்தை அவன்
எச்சில்பட முத்தமிட்டு
எழுபியும் விடுகிறான்!!!

நறுமலர் வடித்த
கள்ளை கொண்டே
என் முகம்
மட்டும் அல்லாது
மனமும் அல்லவா
மலர்ந்து விடுகிறது!!!
********************************************************************
யார் சொன்னது
தாய் தாலாட்டில்
மட்டுமே,மகன்
துயில்வான் என்று?

அப்பன் ஆராரிரோ
உளறினாலும் அவனும்
சேர்ந்து பின்பாட்டாய்
பாடியபடி சொக்கிப்போய்
அல்லவா தூங்கிவிடுகிறான்
என் மகன்!!!
********************************************************************
அவன் தூங்கும்
போது,சத்தமில்லாது
விழிகளை அவன்
மேல் பதித்து
தியான துறவியாய்
காத்திருப்பேன், உதடுகள்
மெல்ல விரித்து
தூக்கத்தில் சிரித்து
தெய்வ தரிசனத்தை
வரமாய் தந்திடுவான்!!!
********************************************************************
எறும்பு கடிக்க
அவன் அழுதாலும்
என்னுயிரோ வானுக்கும்
மண்ணுக்குமாய் துடி
துடித்து பதறி
அல்லவா போகிறது!!!
********************************************************************
ஒருநாள் முட்டிபோட்டான்,
மற்றொருநாள் எட்டுவைத்தான்,
இன்னுமொருநாளோ நடக்க
ஓட கற்றுத்தேர்ந்து!!!

பயிர்ச்சியையும்,முயற்ச்சியையும்
எப்படி சலிக்காது
கையாண்டு வெற்றியடைவது,
என வாயடிவித்துவானாய்
சொல்லாமல் செய்முறையில்
கண் முன்னால்
தெள்ளத்தெளிவாய்
போதித்தே விட்டான்!!!
********************************************************************
என் வீட்டு
கெளரிகள் எல்லாம்
இவன் பிளாஸ்டிக்
மட்டைக்கு பயந்தே
பஞ்சாங்கம் பார்த்து
குடிபெயர்ந்தே போய்விட்டன!!!!
********************************************************************
புத்தக அலமாரி,
கட்டில் தலைபீடம்,
என ஒன்றை
விடுவது இல்லை,
எதை பிடித்தும்
தொங்கோ தொங்கென்று
தொங்கிடுவான்!!!

ஆதலால் அவன்
அம்மா அவனுக்கு
செல்லமாய் வைத்த
காரணப்பெயர் தொங்குராஜா!!!
********************************************************************
இவனால் பெருமைகள்
பற்பல அவனின்
அம்மா அனுபவித்தாலும்,
சேட்டைகள் செய்யும்பொழுது
மட்டும் அப்பனுக்கு
புள்ள தப்பாமல்
பிறந்திருக்கான் வாலு,
அவளிடமிருந்து வசவு
மட்டும் தவறாம
வாங்கி தந்துடுவான் !!!
********************************************************************
உள்ளது உள்ளபடி
தெரிவிப்பதிலும்,தெளிந்த
நீரோடையாய் உண்மையை
மட்டுமே பேசுவதிலும்,
புறம் ஒன்று
அகம் ஒன்று
என்ற இரட்டை
வேடம் தவிர்த்து
ஓர் நிலையாய்
இருப்பதிலும் குழந்தைக்கு
நிகர் குழந்தையே!!!

********************************************************************
கடவுள் மனிதனுக்கு
அளிக்கும் ஒப்பற்ற
பரிசு குழந்தை!!!
********************************************************************
பெற்றோர்களே பிள்ளைகளின் முன்னிலையில் எப்பொழுதும் தீய சொற்களை பேசாது, சண்டை போடாது இருப்பீர்களாக, அவர்களை கண்ணும் கருத்துமாய் பேணி வளருங்கள்,கோபம் வந்தாலோ,கவலைகள் வந்தாலோ,உங்கள் குழந்தைகளின் முகத்தை சற்றே உற்று ஒருமுறை பாருங்கள் எல்லா துயரங்களும் இறந்தே போய்விடும்,

உண்மையில் நாம் பிள்ளைகளுக்கு அதிகம் கற்பிப்பதை காட்டிலும், அவர்கள் நமக்கு நிறைய விஷயங்களை எளிதாக தெள்ளத்தெளிவாக கற்ப்பித்து விடுகிறார்கள்,

ஏனெனில் குழந்தையும் தெய்வமும் ஒன்று!!!

புகைப்படத்தில் இருப்பது தங்கள் நவீனுக்கு இறைவன் அளித்த குட்டி வாத்தியார்!!!

அவன் எல்லா வளமும் பெற்று, நீடோடி சான்றோனாய் வாழ வாழ்த்துங்கள் என
பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!!

குழந்தைகளின் முகத்தில்,
இறைவனை காண்போம்!!!

குழந்தைகளை கொண்டாடுவோம்!!!

என்றென்றும் அன்புடன்
நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (26-Apr-13, 5:02 am)
பார்வை : 569

மேலே