ஆலம் விழுதுகள்

ஆலமரத்தின் விழுதொன்று சொன்னது
வித்தில்லாமல் பிறந்தோம் நாங்கள்
உணவில்லாமல் வளர்ந்தோம் நாங்கள்
உரமில்லாமல் ஊன்றினோம் நாங்களும்
உண்மையில் அதிசயப் பிறவிகள் தான்
எங்களைப் போல் எவரும் இல்லை என்றது !

தாயான மரமோ சொன்னது பிள்ளையே
என் சத்தில் பிரித்து கொடுத்தேன் உனக்கு
என் உணவை பகிர்ந்தும் தந்தேன் உனக்கு
இட்ட உரத்தை ஊட்டி வளர்த்தேன் உன்னை
நானும் வளர நீயும் உறுதியுடன் தழைத்தாய்
பூமியை தொட்டதில் பூரித்தும் போனேன் !

வெட்கி குனிந்தது வழியில்லாத விழுதும்
உண்மை புரிந்ததால் உள்ளம் சிலிர்த்தது !
தாயில்லாமல் எவரும் பிறந்ததில்லை
தானே யாரும் வளர்ந்ததில்லை என்று
புரிந்தவர்க்கு தாயின் புனிதம் புரியும்
அன்னையின் அருமையும் தெரியும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Apr-13, 3:15 pm)
பார்வை : 156

மேலே