மிஞ்சுவதென்ன???

விழிகள் மயங்கும்போதுதான்
விழிக்கின்றன கனவுகள்..
பகலில் படுந்துயரங்கள்
இரவிலும் படுத்துகின்றன.
இதுவென்ன வாழ்க்கையோ!

வாழ்க்கையொரு பூஜ்யமே
வாழும்போதே தெரிகிறது.
வாழ்வதற்கு மனிதர்படும்
வலிகளும் புரிந்தாலும்.
வாழத்தான் துடிக்கிறது.

ஆசைகள் மனிதர்களை
ஆட்டித்தான் படைக்கிறது.
வேசைகள் போலுங்கெட்டு
வெட்கத்தை தொலைக்கிறது
வெறியாக்கி அலைக்கிறது.

பஞ்சுமெத்தை படுத்தாலும்
கொஞ்சுமூஞ்சல் ஆடினாலும்
மஞ்சேறி மகிழ்ந்தாலும்
வாங்கும் மூச்சுப் போனாலே
தேங்குவதும் யார்தானோ !

இன்று நான் எழுதுகிறேன்
என்று நான் பறப்பேனோ!
அன்று நான் எழுதுவேனோ!
ஆரறிவார் இத்தளத்தில்?
அமைதியாகும் என் பக்கம.

இரவலிந்த மெய்யதனை
எத்தனை நாள் விட்டுவைப்பான்.
வரவு செய்யும் நாளதனில்
வாரிச்செல்வான் மொத்தமாக.
வரலாறும் முடித்து வைப்பான்.

மனையாளும் மக்களும்
மறந்திடப் பதினாறு நாள்.
மற்றவரும் புலம்புவாரே
மயானக் காடு மட்டும்.
சூன்யமே நமக்குப் பூர்வீகம்.

அஞ்சுவதஞ்சி வாழும்
அறம்பிறழா மனிதர்க்கு
எஞ்சுவதும் புண்ணியமே
இட்டுச்செல்லும் இறைவனடி
மிஞ்சுவதும் வேறென்ன?



சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (30-Apr-13, 1:09 am)
பார்வை : 91

மேலே