புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்தது ஏன்??
நம்மிடம் வாசிக்கும் ஆர்வம் குறைந்து கொண்டேபோவதற்கான காரணங்கள் என்ன என்ன..
பெரும்பாலானோர் தங்களின் புத்தக ஆர்வத்தை குங்குமம், பொன்னியின் செல்வன் என நிருத்திக்கொள்கின்றனர். நமக்கு முந்தைய தலைமுறையினரிடம் இருந்த அளவு வாசிக்கும் பழக்கம் கூட நம்மிடையே இல்லை. அவர்கள் குறைந்தபட்சம் சமயம் சார்ந்த நூல்களை வாசிக்கும் பழக்கத்தையாவது வைத்திருந்தனர். நம்மிடையே அதுவும் குன்றிவிட்டது.
இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணம் என்று பொதுப்படையாய் சொல்லிவிட முடியாது. இணையத்தில் புத்தகம் வாசிக்கும் ஒரு கூட்டமும் உள்ளது. நானும் அந்த கூட்டத்தின் ஒரு அங்கம் தான். அதனால் என்னால் இந்த கருத்தை ஏற்க முடியவில்லை
சிலர் சோம்பல்பட்டுக் கொண்டு வாசிப்பது இல்லை. அவர்களால் நிச்சயம் இதை முழுவதுமாக படிக்க இயலாது..
காதல் கதைகளையும், சராசரி புதினங்களையும், புதுக்கவிதைகளையும் வாசிப்பதில் மெச்சிக்கொள்கிற அளவுக்கு ஒன்றும் இல்லை. அதற்காக நான் இங்கு எல்லா புதினங்களையும், கவிதைகளையும், கதைகளையும் பற்றி சொல்லவில்லை. அவற்றால் ஒரு நன்மையேனும் இருக்க வேண்டும். அறிவு விசாலம் அடைதல், மொழியறிவை வளர்த்தல், சமூகத்தைப் பற்றியோ, ஒரு செய்தியைப் பற்றியோ புதியதொரு பார்வையைக், கண்ணோட்டத்தைத் தருதல், என அந்த நூல் ஏதேனும் காரணத்தைத் தன்னகத்தேக் கொண்டிருத்தல் வேண்டும். நாம் வாசிக்கும் நூல்களுக்கு இத்தகைய அம்சங்கள் உண்டா???
வாசிக்கும் பழக்கம் இந்த தலைமுறையிடம் குன்றியதற்கு சில காரணங்களை நான் குறிப்பிடுகிறேன்.
முதலாவது நம் கல்வி முறை.வாசித்தலை வெறுக்கும் அளவிற்கு மனனம் செய்தலை மாணவர்களிடையே புகுத்திவைத்திருக்கிறது. திருக்குறள் போன்றதொரு அருமையான நூல் இருக்க முடியுமா? ஆனால் பள்ளி மாணவர்கள் அதனை வெறுக்கக் காரணம் என்ன? நாற்பது குறள்களைக் கொடுத்து, அதில் இருபது குறள்களை மனப்பாடப் பகுதியில் சேர்த்துவிட்டு தெரிந்தோ தெரியாமலோ மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தைக் கெடுத்துவிட்டனர். பாடப் புத்தகத்தைக்காட்டிலும் சுஜாதா எழுதிய குறுந்தொகை விளக்கம் எளிதாய் இருப்பதன் காரணமும் இது தான். இலக்கியதிற்கு மட்டும் அல்ல தமிழகத்தில் அறிவியலுக்கும் இதே நிலை தான்.
நாம் சிறு வயதில் படித்த சிறுவர்களுக்கான புத்தகங்கள் அளவு இன்று வெளிவரும் புத்தகங்கள் இல்லை என உறுதியாகக் கூறலாம். அதற்கு மேல் இன்றைய குழந்தைகள் நிகழ்ச்சிகள் ஒரு சாபக் கேடு என்றே சொல்லலாம். ஒரு நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றனர். அதில் தான் குழந்தைகள் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். பெற்றோரும் அதனை ஒரு பொழுதுபோக்காக அனுமதிக்கின்றனர். இங்கு வாசிக்கும் பழக்கம் முழுவதுமாக அடிபட்டுப் போகிறது.
அடுத்ததாக ஒரு பொறியியல் படிக்கும் மாணவியாக இளைய சமூகத்திடம் வாசிக்கும் பழக்கம் இல்லாததற்கு நான் பார்த்த சிலவற்றைக் கூறுகிறேன்.
பொதுவாக வாசித்தலை, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எள்ளிநகையாடும் ஒரு கூட்டம் உண்டு. அவர்களுக்குப் பயந்தோ, அதுதான் பெருமை என்று நினைத்தோ சிலர் வாசிப்பதே இல்லை. இதனைக் கல்லூரி மாணவர்கள் கண்கூடாகப் பார்க்கலாம். சிலர் நேரவிரயம் எனவும் கருதுகின்றனர். அவர்களுக்கு வேறு தலையாய கடமைகள் இருக்கும், அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது.
இன்னும் சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதைப் பெருமையாக எண்ணித் தமிழ் நூல்களை வாசிப்பதில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், எந்த மொழியாயினும் அது வாசிக்கும் நூலின் தரத்தைப் பொருத்துதான் அமைகிறது. வாசிப்பதற்கு மொழியினால் பெருமையோ சிறுமையோ கிடையாது.
வாசிக்கும் பழக்கம் இல்லை ஆனால், வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால், தங்களின் பழக்கத்தை மிக எளிமையான நூலில் இருந்து தொடங்கலாம். இல்லையேல் அது கடினமாய்த் தான் இருக்கும். பிறருக்கு பரிசாய் நூல்களைக்கொடுக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு நூல்களைப் பரிசளியுங்கள்.
எவன் ஒருவன் அதிகம் வாசிக்கிறானோ அவனால் தான் சபையில் சிறந்த முறையில் பேசவோ, சிறந்த நூல்களை எழுதவோ முடியும். இவ்விரண்டு ஆசைகள் உள்ளவர்கள் கட்டாயம் அதிகம் வாசியுங்கள்.
விதிவிலக்குகள் எல்லாம் எடுத்துக்காட்டுகள் ஆக. இது சராசரி தமிழ் மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு எழுதியது.
மேற்கூறியவற்றைப் பற்றிய கருத்துக்களை விமர்சங்கங்களை வரவேற்கிறேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
நன்றி.