தமிழெழுத்து எழுத வா தமிழா!!!

உயிர் விதை தந்தை விதைக்க
உடல் தந்து தாய் புறந்தள்ள
உயிரோடு உலகில் உலவும் தமிழா
உந்தி வா தமிழ் எழுதவே!!!

தன் அப்பன் பெயர் தொடங்கி
தன் வீட்டு முகவரி சேர்த்து
படித்துப்பெற்ற பட்டத்தையும் ஆங்கிலத்தில் எழுத
தமிழன்னை அங்கே கண்ணீர் வடிக்கிறாள்!!!

பேருந்து நிலையம், பேருந்து வண்டி
தொடர் வண்டி சீட்டு சிந்தனையிலும்
ஆங்கிலம் ஆட்டம் போட்டு ஆட
தமிழங்கே மறைந்து உறைந்து நிற்கிறதே!!!

வணிக கடைகளின் வளைவு நெளிவுகளில்
வண்ண வண்ண விளம்பர உச்சத்தில்
ஆடை யணியா ஆங்கிலம் வாய்திறக்க
இருப்பது இங்கிலாந்தென்று இதயம் கனக்கிறது!!!

ஆங்கில சேற்றை பூசி கொண்டு
தமிழ் முகவரி கொள்ளும் தமிழா
காய்ந்த சேற்றை கழுவி விட்டு
சிலிர்த்து எழுவாயா தமிழெழுத்து எழுதவே!!!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (2-May-13, 8:27 pm)
பார்வை : 75

மேலே