அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்------நீள் கவிதை

‘இது
என்ன காயம்?’
‘இது
அவுங்க போட்ட அறுவா வெட்டு’
‘இது என்ன கோடு?’
‘இது
அவுங்க சவுக்குப் போட்ட
சாசன வரிகள்...’
‘இது என்ன கண்ணில்?’
‘இது
அந்த நந்தனை எரிச்ச
நெருப்பின் மிச்சம்...’

‘மாறா... ஐயோ... எஞ்சாமி
மாறா...’

அந்தச் சேரிக்
கூரை ஓலைகள் படபடக்க
எழும் ஓர்
அவலக் கூக்குரல்...
ஊமை இருள்
உறுத்தலில் புதைந்திட

வானத்துக்
குஷ்ட வட்டம்
சீழ் கொட்டிக் கொண்டிருக்க
நீதியின் நிராகரிப்பில்
நிர்க்கதியாய் மாண்டவர்கள்
மூச்சு மிச்சங்கள்
மந்தை மந்தையாய்
மரங்களை அசைக்க...
கண்ணீர் என்னும்
வெப்ப வளையங்களுக்குள்
சேரி
வெந்து கொண்டிருந்தது.

அங்கே
உலைக்குள விழிகளில்
ஒரு இரும்புப் பாளம்
புரண்டது...

உலகையே உலுக்கும்
பூகம்பம்
மாறன் மனத்தில்
பாலியம் கடந்து
வாலிபம் அடைந்து கொண்டிருந்தது.
அதன் அந்தரங்கத்தில்
அரக்க முகம் ஒன்று
சிரித்துச் சிரித்து
நெருப்பை வளர்த்தது.
அவ்வூர்ப் பெரியபண்ணைச்சாமியின்
சிறியமுகம் அது.

அவர் களஞ்சியத்தில்
நெல் மணிகளாய்
இவன் நெற்றி வேர்வைகளே நிரம்பின.
இவர் தன்
கைகளால் கிளைகளை அசைத்ததும்
சாமியின் சாக்குப்பை
நாணயக் கனிகளால்
வீங்கிப் புடைக்கும்.

இவன்
வறுமைச் சூட்டில்
கரிந்து போன
அரிசனக் கூட்டத்தில்
அரிச்சுவடி தெரிந்தவன்.

பாலம்போல்
பண்ணையில் இவன்
குனிந்த போதும்
உதட்டுக் கரையில்
ஒதுங்குவது...
‘எல்லோரும் ஓர்குலம்’
என்ற
எட்டையராத்தான் எழுத்துவரிதான்.

‘என்னடா ஓர்குலம்’
பறையனும் பாப்பானும்
ஒன்னாடா?
அரளியும் ரோஜாவும்
ஒன்னாடா?
ஆடும் புலியும்
ஒன்னாடா?

ஜன்மம் தந்த ஜாதி
கன்ம பலனடா
அனுபவித்தே தீரணும்’
­ உறுமும் பண்ணையார்
உதட்டில் உரசிப் பிடித்த
நெருப்புக் குச்சிகள்,
தீப்பந்தக் குஞ்சுகள்.

இவர்தான்
பஜனைப் புரட்சி
வினோபா பாவே
கால் நடையாகவே வந்து
பூமிதானம் என்றவுடன்
பண்ணையாட்களுக்குப்
பட்டாக் கொடுத்தவர்.

‘பறையனுக்கென்ன பட்டா’
என்று
உபதேச பாபா, ஊர்விட்டுப் போனதும்
பறித்துக் கொண்டதும்
இவர்தான்.

அரிசனம் என்பது
அரசியல் வழக்கு.
பறையன் என்பதே
பண்ணையார் வழக்கு!

சாதி அகராதிக்கு
அண்ணல் காந்தி
அருளிய கொடைதான்
அரிசனம் என்பது.

மகாத்மாக்களின்
முலாம் பூசிய மொழியில்
வறுமைகூட
இறைவனின் பிரசாத மாகலாம்.
வெள்ளைச் சட்டையோடு
வீதியில் ஒருநாள் போனான் மாறன்.

“பறையனுக்கு என்னடா
பவிசு?”
நறுக்கு மீசையுடன்
கழனிக்குள் மாறன் கால்வைத்தகாலை

“பொறுக்கிப் பயலுக்குப்
புதுசா என்னடா?”

வாக்குவியாபாரத் தேர்தல்
திருவிழா...
அம்மணக் குழந்தைகள்
அடுப்படி கிடக்க
நிர்வாணக் குடிசைகளைக்
கொடிகள் புதைத்த நேரம்
மாறன்
ஊர்வலம் போனான்.

“இந்த முகரக் கட்டைக்கு
இது ஒரு கேடா?”

அந்தச் சாமியின்
மார்பில் புரண்டது
பூணூலா...?

உள்ளப் புற்றிலிருந்து
வெளிவந்து நெளிந்த
விரியன் பாம்பா?

நேற்று
நிமிர்ந்து நின்ற மாறன்
கூலி உயர்வுக்
கோஷம் போட்டான்.
அவனுக்குப் பின்னால்
பதுங்கிய படியே பத்துக் கூலிகள்

‘எதுக்கடா ஒசத்தணும்
எவண்டா கேட்டவன்?’
என்று
குதப்பிய வெற்றிலைக்
குருதியை உமிழ்ந்த
ஒற்றைச் சாமிக்குள்
ஒருநூறு ஓநாய்கள்
ஊங்காரம்!

ஓரடி முன்னே
மாறன் நகர்ந்தான்.
‘நில்லுடா பறையா
நில்லு...
ரொம்பத் திமிர்தான்
உனக்கு...’

“சாமி!
சனநாகக் சுடர்முன்
அனைவரும் சமம்தான்.

பறையன் பறையன்கிற
பல்லவி வேண்டாம்
எங்கள்
நந்தனை
அந்தச் சிவனே ஏத்துக்கலையா?”

‘ஆரடா சொன்னான்
அப்படி?
அவனை அக்கினிக் குண்டத்திலே
சாம்பலாக்கின
சாதியடா நான்.
எந்தச் சிவன் நந்தனை
வெந்து போகாமல் எழுப்பினான்?”

“சாமி கோயில்லே ­ அது
நடந்திருக்கலாம்.
ஜனநாயகக் கோயில்லே
சரிப்படாதுங்க...”

“போடா போ புலைப்பயலே,
அந்த
நந்தனை எரிச்ச நெருப்பின்
மிச்சம்
இன்னும் இருக்கு.
எகிறினால் எரிந்து போவாய்!”

“வெள்ளமும் புயலுமா?
வீசியடிச்சா
ஜனநாயக சாமிப்
பூசாரி மார்கள்
பொட்டலம் போடுவா

பொறுக்கித் தின்பீர்
அவ்வளவு தான்
அதுக்கு மேல் என்னடா?’

“என்ன கொழுப்பு ஐயரே!”
எம்பினான் மாறன்.
பயந்து அவன்பின்
பதுங்கி நின்ற பத்துப்பேர்
அவனைப்
பாய்ந்து பிடித்தனர்.

இன்று
ஊமை இருள்
உறுத்தலில் புதைந்திட
வானத்துக்
குஷ்டவட்டம்
சீழ் கொட்டிக் கொண்டிருக்க
கண்ணீர் என்னும்
வெப்ப வளையங்களுக்குள்
சேரி வெந்து கொண்டிருக்க...

மாறன்
மனத்து மதில்களை
இடித்துத் தள்ளி
மதகளிறுகள் ஆயிரம்
பிளிறின
வெளியே!

கனத்த இருட்டு,
கரைந்து,
காற்றின் சலனம்
குறைந்து ­ சேரி
நெடுமூச்சில்
இழைந்து,
புலராத வேளையில்
உலராத புண்களோடு
எழுந்தான்
இரண்டாவது நந்தன்.

இப்போது இவன்
நரம்பு முறுக்கேறிய
இரும்புக் கரத்தில்
அந்த
நந்தனை எரித்த
நெருப்பின் மிச்சம்!

எழுதியவர் : ஈரோடு தமிழன்பன் (3-May-13, 8:51 pm)
பார்வை : 1360

மேலே