வாராயோ வெண்ணிலாவே!

நேற்றுவரை நீயிருந்தாய் வெண்ணிலாவே இன்று
நேசமின்றிப் போனதெங்கு வெண்ணிலாவே
தூற்றியுனைத் தேயவிட்ட தேன்நிலாவே - உன்னை
தூக்கியவர் வைத்த முடி விண்ணில்தானே
தோற்றுவ தென்றான பின்னே வெண்ணிலாவே -நீயும்
தோழமை கொண்டோடி வாராய் வெண்ணிலாவே
பாற்குவளை கொட்டியதாய் வெண்ணிலாவே - வந்து
போர்க்கு மிருள் நீக்கி ஒளிர் கொள்ளுவாயே!

பூத்திடும் நற்சோலைமலர் வெண்ணிலாவே - உந்தன்
பூ முகத்தைப் போலிருக்கச் காணுவேனே
கூத்திடும் தென்னோலை நீவும்காற்றும் தானே உந்தன்
கோலவண்ணம் மாற்றமுகில் தள்ளினானோ
சாத்தி வைத்த கோவில் தெய்வம் கண்டிடாதோ - உன்னை
சஞ்சலத்தில் நீக்கி அருள் செய்யும்தானே
நீ(த்)திரும்பவந்து ஒளி பொங்கும் வானே - முகில்
நீங்கிய பின் எந்தன்மனம் உண்ணும் தேனே

சாத்திரங்கள் தேவையில்லை வெண்ணிலாவே - உன்னில்
சத்தியமாய் காதல் கொண்டேன் வெண்ணிலாவே
ஆத்திரங்கள் கொள்ள வேண்டாம் பொன்நிலாவே - மனம்
ஆற்றுமொரு புன்சிரிப்பு கொள்ளும் நாளே
தோத்திரங்கள் சொல்லி வைத்தேன் வெண்ணிலாவே - அந்த
தெய்வம் விழி பார்த்துவிடும் இந்த நாளே
பூத்ததில் கள் உண்ணவரும் வண்டு போலே - துயர்
போக இன்பம் நாடிவரும் வெண்ணிலாவே

நீர்த் துளிகள் பார்வைமீது வெண்ணிலாவே -அதை
நீயும் கொள்ளத் தேவையில்லை வெண்ணிலாவே’
பார்த்திரு நல் லின்பத்தோடு வெண்ணிலாவே - நீயும்
பாதைகண்டு போகும் நிலை கொள்ளுவாயே
ஆர்த்தெழும் பல் புள்ளினங்கள் செல்லும்போதே - அதில்
ஆனந்தமென்றாவது போல் வெண்ணிலாவே
சேர்த்துனது துன்பமெல்லாம் போகும் காணே! - நீயும்
செல்லுகின்ற வான் தெளிந்துகொள்ளும் பாரேன்

எழுதியவர் : கிரிகாசன் (10-May-13, 7:00 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 102

மேலே