இன்றைய அரசியலும் இலவசமும்

தேர்தல் வரும் காலம் யாவும்
தெரு நிறைக்கும் பேரிரைச்சல்
திரும்பிடும் திசையாவும் -சுவர்
தின்று தீர்த்த விளம்பரங்கள்
வசைப்பாடி புகழ்ப்பாடி
வற்றாத பொய்க் கூறி
ஒற்றாகக் ஓர் கூட்டணி
வென்றாக இது சொல்லும்
இல்லாது இல்லாதாக்க
இலவசமே உள்ளதாக .....
தீரும் மட்டும் திருடியக் கூட்டம்
திருடிப் போடும் கூரியத் திட்டமே
இலவசம் ....
யாருக்கு யார் தருவது இலவசமென்று
பாருக்கு பறைசாற்ற வேண்டிய காலமிது
நெற்றி வியர்வை நிலம் தழுவ
நித்தம் உழைக்கும் விவசாயி
நிற்பதோ -இலவச
அரிசிக்காக ..
நாகரீகம் உடுத்துகின்ற ஆடையாவும்
நெய்கின்ற நெசவாளி
நைந்தே நிற்கின்றான் -இலவச
வேட்டி-சேலைக்காக ...
மேய்ச்சல் நிலம் யாவும்
மேய்ந்து நிற்க பொருளாதார மண்டலம்
மேய்த்தல் தொழில் வளர்க்கும் -இலவச
ஆடு, மாடு எதற்கு ?
திறம் வளர்க்கும் நல்-
திரை நிகழ்ச்சி பார்த்ததில்லை
தினம் உடை திறக்கும் பெண்களின்
உரையாடல் முன் னிறுத்தும் -சொந்த
ஊடகங்கள் முன்னேற -இலவசமாய்
வண்ணத்தொலைக்காட்சி!
தங்கம் வெட்டி வெட்டி மலடான
தாய்மண் கோலார்-இந்தியம்
ஈடேற கொட்டிக் கொடுத்த
பாரி வள்ளல் வரலாறு -இதைப்
பாவமென்று எண்ணியோ-இலவசமாய்
தங்கத் தாழி !
சொல்லி மாளா இலவசங்களால்
சொக்கித் தவிக்கும் தேர்தல் களங்களில்
விக்கித் தவிக்கும் தமிழனுக்கு
திக்குத் தெரிவது கடினமே!
இலவசங்கள் தருகிறேன்
என்பவனை எண்ணிப்பார்
இலவசமாய் நீ தந்த இருக்கையையே
தின்றவன் என்ற உண்மையை
மெய்பிப்பார்......