9.என்னைக் கவர்ந்த கவிதைகள். உங்களையும் கவரும்.

சூரிய குல நாயகன் ..............!
அகப்பூ மலர்வது கண்டேன்
==ககபதிகள் கூடி வட்டமிட
அகண்ட கலை உணர்ந்தேன்
==கந்தர்வ ஆடவன் தன்னில் ;
அத்வைத கொள்கை ஏற்றவள்
==இவள்தனில் பாதி நீயோ !

ஆகாய வாணி மௌனமாய்
==தினம் கண்சிமிட்டக் கண்டு
ஆனந்தக் கூத்துக்கள் ஆவதோ
==இதயம் கொய்கின்ற லீலை ;
ஆதாரங்கள் தன்னிலை இழந்து
==தேடும் தருணம் நீயோ !

இருமை தேடும் விதியாவது
==கலியுக சம்பவம் ஆனதோ
இருண்மைக் குணமே இவள்
==கண்கள் மருண்டு நின்றேன்
இந்திரஜால தந்திரம் பூண்டு
==மயக்கும் பரிபூரணம் நீயோ !

ஈரேழு உலகங்கள் குடைந்து
==இயற்கை பெற்ற எழிலவன்
ஈறில் பூர்வஜென்ம வாசனை
==இனங்கண்டு வந்து சேரவே
ஈனர்கள் கூட்டமது விலக்கித்
==தாரமெனப் பற்றுவது நீயோ !

உட்பகை தனலில் இட்டவன்
==சூரியகுல கர்வ காவியம்
உளத்தேர் இழுக்கும் தேரோட்டி
==காதல்குல மரபுத் தனயன்
உதாரசிந்தை வம்ச நாயகனே
==கண்டதுனைக் கனவு ஆனதே !
*********************************************************************
உதாரசிந்தை = தர்ம சிந்தனை
உட்பகை =உளத்திற்கு எதிரான பகை
ஆகாயவாணி = அசரீரி தேவதை
ஆதாரங்கள் = உடலின் ஆதார நிலைகள்
ககபதி = கருடன்
அத்வைதம் = ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இரண்டும் ஒன்றே என்ற கொள்கை
அகண்ட கலை = சூரிய கலை
........................................................................

அழகிய கவி வடிவம் தாங்கி
இனிய தமிழ் பூசி
சூரிய குல நாயகன்
எதுகை மேனை அலங்கரிப்புடன்
நல்லதொரு காதல் வருத்தத்தையும்
சொல்லிப் பாடும் இனிமைப் பா இது!

படிக்க படிக்க ரசனை கூட்டும் இப்படைப்பு
என்னை கவர்ந்தது படித்தால் நிச்சயம் உங்களையும் கவரும்!

எழுதியவர் : புலமி அம்பிகா (14-May-13, 7:40 am)
சேர்த்தது : அஹமது அலி
பார்வை : 130

மேலே