"கொடை"

"கொடை"
================================ருத்ரா

"எலெ சொள்ள மாடா
என்னத்தலெ சொல்லுதது?
ஓம் மாடு
ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ
வாய வைய்க்கிது.
பெரவு
ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ.
ஓம் மாடே
கசாப்புக்கு போட்டுரலாமா?
இல்ல‌
ஓம் கால ஒடிச்சுடலாமா?"

அவ‌ர் உறுமி விட்டு சென்றார்.
சொள்ள‌மாட‌னுக்கு
என்ன‌ண்ணே வெள‌ங்க‌லெ.
அவன்
மாடு பின்னெ
வால‌ப் புடிக்காத‌ கொர‌யாத்தான்
மேச்சுகிட்டு வாரான்.

"மென‌க்கிட்டு வ‌ந்து
ஏசிட்டு போராரே.
ஏ(ன்)
வாய்ல‌ என்ன‌த்த‌ வெச்சிருந்த‌?
ஒண்ணுமே கேக்க‌ல‌?"
தாத்த‌னின் பேர‌ன் சீறினான்.

"எல‌ ஓஞ்சோலிய‌ப்பாருல‌"

துண்ட‌ ஒத‌றிக்கிட்டு போய்ட்டான்.
கெழ‌வ‌ன்.
அவ‌னாக‌ புல‌ம்பிக்கொண்டே போனான்.

"நா(ன்)மாட்ட‌ அந்த‌ப்ப‌க்க‌மே
போவ‌ விடுததுல்ல.
அது வ‌ழியாப் போர‌தே
அவ‌ருக்கு அக்யானிய‌மா இருக்கு.
மாடு ப‌யிருல‌ வாய‌ வ‌ச்சுரும்ணு.
அதுக்காவ நம்ம‌
இப்டி அச்ச‌ப்ப‌டுத்தாவ‌ளாம்.
க‌க்க‌த்துல‌ இருக்க‌ முண்ட‌
அரிக்கின்னு
கொஞ்ச‌ம் அச‌ச்சாலே
இவ‌ங்க‌ளுக்கு
சொர‌ம் தா(ன்).
எங்க‌ எல்லாம்
மாத்திப்டுவானுங்க‌ளோன்னு.
அதாம்ல‌
இத்த‌ன‌ "ச‌வுண்டு"..."

எதிரே வ‌ரும்
மாசான‌த்திட‌ம் மோதிப்போய்..
நின்னுட்டான் கெழ‌வ‌ன்.

"ஏஞ்சொள்ள‌ மாடா
க‌ண்ணு என்ன‌ பொட‌தீயிலா?"

"அட‌!ஒண்ணுமில்ல‌ப்பா
ஏதோ நென‌ப்புலெ.."
கெழ‌வ‌ன் தொண்ட‌யில
மீனு முள்ளு மாட்டிகிட்டாப்ல‌
க‌க்க‌லும் க‌த‌க்க‌லுமாய்
குழறினான்.

இப்ப‌ மாட்ட‌
அந்த‌ தெசைக்கே கொண்டு போர‌துல்ல‌.
மாடும் த‌ப்பிச்சுது
அவங்காலுந் த‌ப்பிச்சுது.
ப‌யிரும் ப‌ச்ச‌ப்ப‌சேலா இருக்கு.
வ‌ர‌ப்பு புல்லுல‌ கூட‌ நெல்லு
மொளைக்கும் போல‌தான் இருக்கு.
எல்லாம் த‌ப்பிச்சுது.

ஆனா
திடீர்னு ஒருநா
அங்கிருந்து ஒண்ணும்
இங்கிருந்து ஒண்ணும்
க‌ய்ய‌ கோத்துக்கிட்டு
ஓடிப்போய்ருச்சுக‌.

கெழ‌வ‌ன் வெல‌ வெல‌த்தான்.
எச‌க்கிய‌ம்ம‌(ன்) கொடைக்கி
இந்த‌ வெச‌
ஆடு ர‌த்த‌மா?
ஆளு ர‌த்த‌மா?

================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (15-May-13, 9:28 am)
பார்வை : 71

மேலே