"சிறந்த படைப்புகள்" நாள் 18/05/2013 ***ஆவாரம் பூ***
இத்தள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்...
18/05/2013 அன்று வெளியான சிறந்த படைப்புகள் நடுவரால் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது...
1.சாகுமென் ஜீவிதம்! (ரோஷான் ஏ.ஜிப்ரி)
2.சோகங்களின் பதாகைகள்... மீனாட்சி.பாபு
3.ஊமைப்பெண் நானடி - Harshavardini
4.இதுதான் காதல்!! - கவிஞர்.கொ.பெ.பிச்சையா
5.அவனல்லாத ஒன்றை. - கவிஜி
********************************************************************
1.சாகுமென் ஜீவிதம்! (ரோஷான் ஏ.ஜிப்ரி)
******************************************************
சில கணம்
பூச்சொரியும் ஆச்செரியங்களால்
மூழ்கடித்து விடுகின்றாய்
பல தினம்
பூகம்பமாய் வெடித்து-உயிர்பிழிந்து
நோகடித்து நகர்கின்றாய்
எப்படி உன்னால் மட்டும்
நிறைய முகங்களோடும்
நிறைந்த மோகங்களோடும்
வாழ்க்கையை எழிதாய்
தரம்பிரிக்க முடிகிறதோ அறியேன்?
கால்கொலுசின் அசைவுகளில்
நீ ரசித்துக்கொண்டிருப்பது
என் சந்தோசங்களின் இசையென்பது
உன் மகுடி நாதம்.
நிற்க:
உச்சிப் பொழுதின்
வெம் மணலில்
நகர முடியாமல் தவிக்கும்
ஜீவனொன்றின் கடைசி பாடலது...
எப்பொழுதும்
என் நினைவுகளின் கல்லறைகளில்
நீதான் சமாதியாகி
சஞ்சரிக்கின்றாய்
அதே நொடி கனவுகளில்
ஆவியாகி ஆட்பரிக்கின்றாய்
இன்றைய நாளிலும்
விடியல்களற்ற அஷ்த்தமனத்தின்
பக்கங்களில்....,
மௌனத்தை அருந்தி
விதியை தின்று தொலைத்தபடி
வயிறு முட்டி சாகுமென் ஜீவிதம்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
நாள் : 18-May-13, 5:06 pm
சேர்த்தது : Rozhan A.jiffry
=================================
******************************************************
2.சோகங்களின் பதாகைகள்...
***************************************
வளர்கின்றபோது
வளர்ந்து கொண்டே போகிறது
கனவுகளும் அதன்
எதிர்திசையில் கவலைகளும்....
வயது கூட கூட
குறைந்து கொண்டே போகிறது
சந்திப்புகளும் அதன் பயனாக வரும்
சந்தோசங்களும்...
பயணங்களின் திசையை மாற்றிவிடுகின்றன
பாதங்களும் பாதைகளும் அல்ல
பணமும்-பாசமும்....
சோகங்களின் பதாகைகளை
சுமந்து நிற்கும்
சோலைகாட்டு பொம்மைகள் போலே
மாறிவிட்டது மண்ணுலக
மானிட வாழ்க்கை...
எழுதியவர் : மீனாட்சி.பாபு
நாள் : 18-May-13, 7:08 pm
சேர்த்தது : மீனாட்சி.பாபு
=========================
*****************************************
3.ஊமைப்பெண் நானடி
*********************************
ஒற்றை நாள் ஆயுளோடு
பறக்கின்ற கனவுகளும்
சிறகொடிந்து துடித்தால்
என்ன செய்வேன் இவள் ??
கிழிக்கப்பட்ட நாட்காட்டித் தாள்களாய்
என் வாழ்நாட்கள் இதுவரை
வீணாய்ப் போகவே தேய்கிறேன்
பேரம்பேசும் சந்தோசங்களுக்கு
என்ன விலை கொடுப்பேன்?
மடித்துவைத்த கைக்குட்டையாய்
என் வாழ்வு இதிலே
நெளிவு சுழிவுகளை
மறைக்கவே மிடுக்கானேன்
குப்பையிலும் நான் இல்லை
கோபுரமும் எனதில்லை
கட்டித்தங்க குணமில்லை
வெட்கங்கெட்ட நடத்தையும்
என்னோடு இல்லை
ஒன்றே பெரும் தவறாய்
இன்றுவரை கொண்டவள்
எனினும் அத்தவறுக்கும்
பழியேற்ற பாவி இவள்
பெண்ணென பிறந்துவிட்ட பாவம்
படைத்தவன் தந்துவிட்டான் சாபம்
சமுதாய போக்கு
மனம் முறியச் செய்தது
வீட்டுக்குள்ளேவும் கைதியாக
சிறைபட்ட செய்தது
பரவிக்கிடக்கும் காற்றும்
எனக்குள் ஸ்பரிசிக்க
தலைகுனிந்தேன் ஊமையாய்
சுதந்திரம் இழந்தவளாய்
இருட்டறை பார்க்காத
காயங்கள் என்னுடையது
விம்மி அழும் எனக்கு
அதுவே ஆறுதலும் கூட
தொடங்கவே முடியாத
நிகழ்ச்சியின் பார்வையாளராய்
எதுக்காக காத்திருக்கிறேன்
யாருக்காக காத்திருக்கிறேன் ??
கண்ணீரால் வெளுக்கப்பட்டு
ஒவ்வொரு முறையும்
புதியதாய் கண்சிமிட்டும்
என்னுள்ளே கிடக்கும்
கசக்கி எறியப்பட்ட உறுதிகள்
தினசரி செய்தித் தாள்களில்
ஓரங்கட்டப்பட்ட துணுக்குகளாய்
என்னையும் கவனியுங்களேன்
என்றே கெஞ்சுகிறேன் மௌனமாய்
மீண்டும் கெஞ்சுகிறேன்
என்னையும் கவனியுங்கள் !
"முதலாமாண்டு கல்லூரி கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிதை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி."
எழுதியவர் : Harshavardini
நாள் : 18-May-13, 9:36 pm
சேர்த்தது : Harshavardini
==============================
************************************************
4.இதுதான் காதல்!!
*************************
உந்தன் நினைவுகள்
தேனாய் இனிக்குதடி!
எந்தன் நெஞ்சம்
தானாய் சுவைக்குதடி!
சொந்தம் உன்னில்
கூடி வளருதடி!
அந்த நாளுக்கு
உயிரும் ஏங்குதடி!
கீற்றிடை மீளும்
மின்னலைப்போலே,
கீறிப் பாயும்
உன் எழிலாலே,
ஊற்றிடை ஊறும்
குளிர்நீர் போலே,
ஊறிக் காதல்
பெருகுதுன்னாலே!.
கனவில் உன்முகம்
காட்டுகிறாய்!!
நினைவில் தினமும்
மீட்டுகிறாய்!
உறவில் வளமே
கூட்டுகிறாய்!
பிரியுங் கணம் மட்டும்
வாட்டுகிறாய்!
நாற்றிடை புரளுந்
தென்றல் நானோ !
சேற்றிடைக் குழையும்
மழையும் நீயோ !
போற்றிடை அணையும்
புண்ணியன் நானோ!
காற்றிடை கொஞ்சும்
சுகமும் நீயோ!
அள்ளும் போது
அமைந்திடும் விழிகள்
சொல்லும் அனுமதி
சுதந்திர மொழிகள்.
வெல்லுங் காதல்
விளையாட்டுக் களிகள்!
துள்ளும் அலைகள்
தூறிடும் துளிகள்!
இதயம் எழுதிய
கவிதையிது!
என்றும் வாழும்
காதல் இது!
எல்லை தாண்டா
இணைப்பு இது!
இறைவன் விதித்த
உறவு இது!!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா
நாள் : 18-May-13, 9:15 pm
சேர்த்தது : kppayya
===============================
**************************************************
5.அவனல்லாத ஒன்றை.
*********************************
கனவுகளை தொலைத்தவன்
தூக்கத்தில் தேடுகிறான்
தூக்கத்தில் தேடி
கனவுகளில் தொலைகிறான்
கருப்பு வெள்ளைகளில்
பூத்து குலுங்கும்
பெயர் தெரியாத
பூக்களில் நடுவே
பெண் போல ஒரு உருவம்
ஓடிக்கொண்டேயிருக்க
விரட்டியபடியே
தொலைந்து போகிறான்
வண்ணங்களில் பெய்யும் மழையில்
பட்டம் பூச்சிகளின்
சிறகுகளில் நடந்த படியே
கிடைத்து விடுகிறான்
விடியலில்
நினைவிலிருக்கும் ஒன்று
கனவா....
கனவை தேடியதா
என புரியாத நொடியில்
மெல்ல தூங்கி போகிறான்...
இப்போது கனவுகள் தேட
ஆரம்பிகிறது
அவனல்லாத ஒன்றை....
எழுதியவர் : கவிஜி
நாள் : 18-May-13, 11:06 am
சேர்த்தது : கவிஜி
===========================
****************************
===========================
நன்றி...
நடுவர் குழு....