ஜய பேரிகை
அடுத்தொரு அண்டை நாடு
அடாவடியாய் நம்நாட்டில்
ஆக்ரமிப்பு செய்தபோது
அமைதிப் பேச்சு வார்த்தைக்காய் காத்திருக்கும்
நம் பாரத நாட்டை எண்ணி
ஜய பேரிகைக் கொட்டடா கொட்டு
அன்னியச் சிறையில் ஆண்டு பலவாய்
இன்னலுற்று இந்திய தாய் நாடு
நம்மை காக்கும் என்ற நம்பிக்கையில்
நாசமாய்ப் போன சரப்ஜித் சிங்கை எண்ணி
ஜய பேரிகைக் கொட்டடா கொட்டு
பாகிஸ்தான் பதட்டமின்றி
நம்நாட்டு வீரன் தலையை வெட்டி
நமக்கு பரிசாக தந்த போது
அணுஅளவும் வெட்கமின்றி
அன்றலர்ந்த தாமரைப் போல்
வாங்கி கொண்ட நம் தலைவர்களின்
பூமித்தாய்க்கு நிகர் பொறுமையினை எண்ணி
ஜய பேரிகைக் கொட்டடா கொட்டு
தாம் சொகுசாய் வாழ நம்நாட்டு
செல்வத்தை சுவிஸ் வங்கியிலே போட்டு
நம்நாட்டு நிலமைக்காய் கண்ணீர் வடிக்கும்
நம் தியாகத் தலைவர்களை எண்ணி
ஜய பேரிகைக் கொட்டடா கொட்டு
அண்டை நாடு நம் தமிழனை
அங்கமெலாம் சிதைத்து
கன்னியரை கற்பழித்து
குழந்தைகளை கொன்று குவித்தமைக்கு
வக்காலத்து வாங்கும் நம்
இந்திய தேசத்துக்கு
ஜய பேரிகைக் கொட்டடா கொட்டு
ஜாதி வெறியை தூண்டி விட்டு
பேருந்துகளை கொளுத்தி விட்டு
தான் மட்டும் கண்ணுக்கு அழகான
காரிலே பவனி வரும்
தங்கத் தலைவனை நினைந்து
ஜய பேரிகைக் கொட்டடா கொட்டு
இலவசத்திற்கு கையேந்தி
வாக்களிக்க பணம்வாங்கி
கூட்டம் சேர்க்க கொள்கையை விற்று
அரசியல் வாதிகளின் அடிவருடும்
நம்மை நினைத்து மிக ஆனந்தமாக
ஜய பேரிகைக் கொட்டடா கொட்டு