கறுப்புக் கல்யாணம்-கே.எஸ்.கலை

கனவுகள்…
உணர்வுகள்…
வரப்போகும் வாழ்க்கை -
---மொத்த விலைக்கு
---குடும்பச் சந்தையில் பேரம் !

விவாகரத்தா...
முதிர்க் கன்னியா...
கண்ணீர் அடிமையா -
---இறுதி உறுதி தரப்போகும்
---ஆணாதிக்கத்தின் துருப்புச் சீட்டு !

துப்பட்டாவா...
தூக்க மாத்திரையா...
வாழும் பிண வாழ்க்கையா -
---தீர்ப்பினை எழுதிட
---சுத்தியலோடு நீதிபதியாய் !

சொத்துக்கு சொந்தக்காரி
சோறு போடும் வேலைக்காரி
பெத்துப் போட இயந்திரமாய்
கூட்டிவந்தப் பங்காளி !

சொத்துக்கு ஒத்துப் போனா
மஞ்சக் கயிறு
அத்தனையும் தீர்ந்துப் போனா
தூக்குக் கயிறு !

உணர்வுகள் செத்த
உடல்களின் உணர்சிகள் -
உரசல்களுக்கும், உறிஞ்சல்களுக்கும்
உடல் உறவிற்கும்
ஒட்டு மொத்த குத்தகைக்கு
விட்டு விட்ட பின்னர்
சில்லறைக் கனவுகள் கூட
சிதறிப்போய் சீரழியும் வாழ்க்கை !

கணவன்களின்
முறுக்கேறும் நரம்புகளின்
பசிகளுக்கு விருந்து போட
இரவிலும் -
விடுமுறைப் பகலிலும்
நிரந்தரமாய்...தரமாய்...தாரமாய்
ஒரு தொழில் !

சீதனத்தின் செழிப்பில்
வறண்டு போன வாழ்க்கைகள்
ஒரு கண்ணீர் தேசத்தையே
கட்டியெழுப்பும் !

வாழ்வைவும்
வசந்தத்தையும் கரியாக்கி,
நோவையும் சாவையும் தந்து
பணத்திற்கும் பிணத்திற்கும்
நடக்கும் இதுவெல்லாம் -
கறுப்புக் கல்யாணங்களே !

சொத்தோடு வசதியாய்
வாழ்க்கைக்கு துணை தேடும்
அத்தனைப் பேரும்
ஆண்மையற்ற பெண்ணன்கள் !
சீதனச் சந்தையில்
விலையாகும் விபச்சாரிகள் !

இன்னும் இருக்கிறார்கள்
முதுகெலும்பை
சீதனத்தில் ஒடித்துக் கொண்டு
மீசை முறுக்கி - ஆண் என்று
ஆடித் திரியும் பேடிக் கூட்டங்கள் !

உடற்குறையிலா
ஊனங்களுடன்-
மனைவி எனும் தொழிலைச் செய்ய
குடும்ப நிறுவனத்தில்
தேவையில்லை வேலைவாய்ப்பு !

இந்திரியம் புதைத்து
சந்ததியை உருவாக்கும்
இயந்திரமாய் பெண்டிர்கள்
இனியும் வாழோம் !

சீதனச் சந்தையில்
விற்றுப் போகா
வெற்றுச் சடலங்களாய் -
ஊதாரி ஆண்களை
புறக்கணிக்கப் புறப்படுவோம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (29-May-13, 9:24 am)
பார்வை : 391

மேலே