வெள்ளைச் சுரண்டல்...

மேற்குத் திசைகுறிக்க
மேலோர் எடுத்துரைத்த
மேலை நாடென்னும் பதம்....
வளராத் தண்டுவடம்
வளர்ந்தேறிய தாடையெலும்புத்
தழுவல்களோடு
புனைந்தேறியிருக்கிறது
மேல் நாடென்னும்
கூழைக் கும்பிடுகளோடு....!

வெள்ளை மோகங்களில்
விடைத்த மேலாடைகளேந்தி
புழுங்கி வடிகிறது தேகம்..
வியர்வைக் காடுகளில்
ஆங்கிலம் துப்பும்
எந்திரங்களாய்....!
இடையில் சத்தமின்றி
வேலிதகர்த்து
பருத்திப் பூ பறித்துப்போகும்
ஒரு பரங்கித் தலை...

கச்சையுடை தரித்தும்
இச்சை தவிர்த்துக் காதல்
பழகிய விழிகளில்
காமக் கள்ளூற்றி
விஷமேற்றிப் போயிருக்கிறது
திறந்து வழியும்
தேகத் திரட்சிகள்.....

குருதிக்கள குற்றுயிருக்கு
மருந்திட்டு வழியனுப்பி
வீரம் பழகிய விரல்களில்
புறமுதுகில் சுடச் சொல்லி
துப்பாக்கி சூட்டுகிறது
பழுப்புப் புன்னகைகள்...

ஒருவனுக்கு ஒருத்தியுமாய்
உளஞ் சேர்ந்த கூட்டமதில்
ஆணுறைகள் திணித்து
கைகொட்டிச் சிரிக்கிறது
ஆந்தை வெள் கண்கள்....

மஞ்சள் கிழங்குகளாய்
தேயிலை கொழுந்துகளாய்
பட்டய மருந்துகளும்
பாரம்பரிய வாழ்வியலுமாய்
எடுத்துச் சென்ற இன்னபிறவும்
எடுத்தேறி ஓடுகையில்...

இடுப்புத்துணி
கோவணங்களோடு
கண்ணிமையில் கை வைத்து
பல்லிளித்து
வாய் பிளப்போம்...

அப்பொழுதும்
நீங்கள்
மேல் நாட்டவரென்று...

எழுதியவர் : சரவணா (29-May-13, 8:46 am)
பார்வை : 142

மேலே